பாடகி லதா மங்கேஷ்கர் மறைந்தார்.

கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  பாடகி லதா மங்கேஷ்கர் மறைந்தார். அவருக்கு வயது 92.
 
1929ம் ஆண்டு, செப்டம்பர் 28ம் தேதி பிறந்த லதா மங்கேஷ்கர் முதன் முதலாக 1942 இல் கிதி ஹசால் என்ற மராத்திப் பாடலைப் பாடினார். 1948 இல் இவர் பாடிய மஜ்பூர் என்ற திரைப்படம் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பர்சாத், அந்தாஸ், துலாரி, மகால் போன்ற படங்கள் இவருக்குப் பெரும் புகழை ஈட்டிக் கொடுத்தன.
 
இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படும் இவருக்கு, இந்தியக் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டது.
 
இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்
கொரோனா தொற்று தொடர்பான லேசான அறிகுறிகளுடன், தெற்கு மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் ஜன.8-ல் லதா மங்கேஷ்கர் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக ஐசியூ வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அவருக்கு வெண்டிலேட்டர் வசதி பொருத்தப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
தொடர்ந்து 20 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு அவரின் உடல்நலம் தேறியது. ஆகவே, கடந்த வாரம் வெண்டிலேட்டர் சிகிச்சை நிறுத்தப்பட்டது.
 
ஆனால், நேற்று அவரின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளது என ப்ரீச் கேண்டி மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டது.
 
இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி லதா மங்கேஷ்கர் மறைந்தார். அவரது மறைவை லதாவின் சகோதரி உஷா மங்கேஷ்கர் உறுதி செய்தார். பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திருமணம் செய்யாமலே வாழ்ந்தவர். இவரது சகோதரிதான் பிரபல பாடகி, ஆஷா போஸ்லே ஆவார்.