டி.என்.பி.எல் கிரிக்கெட்டில் புதிய புரட்சியை உருவாக்கியுள்ளது – ‘மதுரை பாந்தர்ஸ்’ அணியின் சி.இ.ஒ மகேஷ் பேச்சு

டி.என்.பி.எல் கிரிக்கெட்டில் புதிய புரட்சியை உருவாக்கியுள்ளது – ‘மதுரை பாந்தர்ஸ்’ அணியின் சி.இ.ஒ மகேஷ் பேச்சு

டி.என்.பி.எல் மூலம் நேரடியாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை வீரர்கள் பெறுகிறார்கள் – ‘மதுரை பாந்தர்ஸ்’ சி.இ.ஒ மகேஷ் பேட்டி

எதிர்காலத்தில் மதுரையிலும் டி.என்.பி.எல் போட்டிகள் நடைபெறும் – ‘மதுரை பாந்தர்ஸ்’ கேப்டன் சதுர்வேதி நம்பிக்கை

புதிய கிரிக்கெட் மைதானங்கள் உருவானால் இளம் வீரர்களுக்கு உதவியாக இருக்கும் – ‘மதுரை பாந்தர்ஸ்’ கேப்டன் சதுர்வேதி கோரிக்கை

தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 6 வது சீசன் வரும் ஜூன் 23 ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 8 அணிகள் பங்குபெறும் இந்த கிரிக்கெட் தொடர் திருநெல்வேலி, கோயமத்தூர் மற்று சேலம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

இளைஞர்களிடம் கிரிக்கெட் மீதான மோகத்தை அதிகமாக வளர்த்தது ஐபிஎல் என்றால், அந்த ஐபிஎல் தொடரில் நுழைவதற்கான நுழைவாயிலாக டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் அமைந்திருக்கிறது. இத்தொடரில் விளையாடிய பல வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் விளையாடி அதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்து வருவதால், டி.என்.பி.எல் தொடர் இந்திய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், டி.என்.பி.எல் தொடரில் விளையாடும் அணிகளில் மிக முக்கியமான அணியாக கருதப்படும் மதுரை பாந்தர்ஸ் அணியின் சீருடை (Jersy) வெளியீட்டு விழா ஜூன் 18 ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில், மதுரை பாந்தர்ஸ் அணியின் டைடில் ஸ்பான்சரான மார்க் நிறுவனத்தின் சி.எப்.ஒ மோகன் பாபு, Siechem நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தாமோதரன், மதுரை பாந்தர்ஸ் அணியின் சி.இ.ஒ எம்.டி.மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய மதுரை பாந்தர்ஸ் அணியின் சி.இ.ஓ எம்.டி.மகேஷ், “எடி.என்.பி.எல் கிரிக்கெட் இளைஞர்களிடம் கிரிக்கெட்டை கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பதோடு, கிரிக்கெட்டில் புதிய புரட்சியையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வருட தொடரில் மதுரை பாந்தர்ஸ் சிறப்பாக விளையாடும். அணியின் வீரர்கள் அனைவரும் அதிக திறன் கொண்டவர்கள். குறிப்பாக ஐ.பி.எல் தொடரில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி மீண்டும் டி.என்.பி.எல் தொடரில் விளையாடுகிறார். இதனால் இந்த வருடம் டி.என்.பி.எல் தொடர் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்க்கும்.

முன்பெல்லாம் ரஞ்சி டிராபி விளையாடினால் தான் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியும். ஆனால், இப்போதெல்லாம் மாறிவிட்டது. டி.என்.பி.எல் விளையாடினால், அதன் மூலம் ஐ.பி.எல் தொடரில் விளையாடி இந்திய அணியில் இடம் பிடித்து விடுகிறார்கள். எனவே, இப்போது கிரிக்கெட் முழுமையாக மாறிவிட்டது. டி20 தொடர் போல் டி10 போட்டிகளும் வந்துவிட்டது. அதனால், டி.என்.பி.எல் தொடரில் விளையாட இளைஞர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். வீரர்கள் தேர்வு வைத்தால் குறைந்தது 1000 வீரர்கள் வருகிறார்கள். வருண் சக்ரவர்த்தி, நட்ராஜ் போன்ற வீரர்கள் டி.என்.பி.எல் மூலமாக கிரிக்கெட்டில் மிகப்பெரிய வளர்ச்சியடைந்திருப்பதால், இளைஞர்களுக்கு மட்டும் இன்றி கிரிக்கெட் உலகிற்கும் டி.என்.பி.எல் புதிய வழியை திறந்திருக்கிறது.” என்றார்.

மதுரை பாந்தர்ஸ் அணியின் கேப்டன் சதுர்வேதி பேசுகையில், “6வது சீசன் டி.என்.பி.எல் தொடர் 23 ஆம் தேதி தொடங்குகிறது. 5 சீசன் தொடர்களும் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த முறை மார்க் போன்ற மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இணைந்திருப்பதால் டி.என்.பி.எல் தொடர் மிகப்பெரிய அளவில் இருக்கும். மதுரை பாந்தர்ஸ் அணி சிறப்பான வீரர்களை ஏலம் எடுத்து வருகிறது. இந்த முறையும் அணிக்கு சிறந்த வீரர்கள் கிடைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பயிற்சியின் போது சிறப்பாக விளையாடினார்கள். பாண்டிச்சேரியில் நடைபெற்ற பயிற்சி போட்டியிலும் வீரர்கள் அனைவரும் சிறந்த திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதனால் இந்த சீசனில் மதுரை பாந்தர்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

டி.என்.பி.எல் தொடரை சர்வதேச அளவில் எடுத்து செல்வதற்கான முயற்சியில் அதன் நிர்வாகிகள் ஈடுபடுவார்கள் என்று நம்புகிறோம். கொரோனாவால் கடந்த சீசன் சென்னையில் மட்டும் நடைபெற்றது. ஆனால், இந்த சீசனில் கூடுதலாக கோயமத்தூர் மற்றும் சேலம் ஆகிய இரண்டு இடங்களில் போட்டி நடைபெறுகிறது. இது எங்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கிறது. அங்கு சென்று விளையாடுவதை ரொம்பவே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அனைத்து இடங்களிலும் எங்கள் அணிக்கு மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம். எதிர்காலத்தில் மதுரையிலும் டி.என்.பி.எல் தொடர் நடைபெறும் என்று நம்புகிறேன். மார்க் போன்ற பெரிய நிறுவனங்களின் உதவியோடு மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் புதிய கிரிக்கெட் மைதானங்கள் அமைத்தால் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு உதவியாக இருக்கும்.” என்றார்.