நேற்று மனிதநேயர் எம்ஜிஆர் அமைச்சரவையில் ஒரே சமயத்தில் பதிமூன்று துறைகளை கையாண்ட, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும், எந்த அமைச்சருக்கும் கிடைக்காத பெருமை கொண்டவர்
திரு வி.வி. சுவாமிநாதன். அந்த அளவு எம்ஜிஆரின் நம்பிக்கையை, மதிப்பை பெற்றவர், அவரை சந்தித்தேன். ஏராளமான தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
திமுகவில் இருந்தபோதே சிதம்பரம் நகர்மன்ற தலைவராக இருந்தவர், பின்னர் அரசு தலைமை வக்கீலாக வர விரும்பியவரை எம்ஜிஆர் தடுத்து பாராளுமன்ற உறுப்பினர் ஆக்கினார். அதிலிருந்து அரசியலில் ஏறுமுகம் தான். எம்ஜிஆரின் 100 சதவீத உண்மை விசுவாசி அவர். அதனாலேயே தன் வலது கையில் அதிமுக கொடியையும், இடது கையில் எம்ஜிஆரின் உருவத்தையும் பச்சை குத்திக்கொண்டவர்
வி.வி.எஸ்.
அப்படி பச்சை குத்திக்கொண்ட ஒரே அமைச்சர் அவர்.
எம்ஜிஆருக்குப்பின் ஜானகி எம்ஜிஆர் முதல்வரான போது, 14வது துறையாக வி.வி.எஸ்.ஸை தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் ஆக்கினார். ஒரே சமயத்தில் இந்து அறநிலையத் துறை, வக்பு வாரிய தலைவர் பொறுப்பையும் கையாண்ட பெருமைக்குரியவர் அவர்.
எம்ஜிஆர் மீது பெரு மதிப்பு கொண்டவர் என்பதினாலேயே ஜெயலலிதா வி.வி.எஸ்.ஸை அலட்சியப்படுத்தினார். அதனால் அரசியலில் தீவிரம் காட்டாமல்
வி.வி.எஸ் ஒதுங்கிக் கொண்டார். எம்ஜிஆரின் நினைவுகளை தன் சொத்து என்று கருதுகிறார் இன்றுவரை. 96 வயதானாலும் சுறுசுறுப்பையும், நல்ல நினைவாற்றலும் கொண்டிருக்கின்றார்.
நேர்மையும், உண்மையும் எம்ஜிஆர் அமைச்சரவையின் பலம் என்பதற்கு வி.வி.எஸ். ஒரு உதாரணம்.
இதயக்கனி எஸ். விஜயன்.