திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக கொடியேற்றி உறுப்பினர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

ஆகஸ்ட் 15, 2022, இன்று 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சுதந்திர தினம் கோலாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக கொடியேற்றி உறுப்பினர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு சுதந்திர தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

சிறப்பு விருந்தினராக நடிகர் திரு சூரி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்கத்தின் சார்பாக கொடி ஏற்றி விழாவை சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் திரு சூரி அவர்களுக்கு சங்கம் சார்பாக பொன்னாடை போற்றி நினைவு பரிசு கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

நடிகர் சூரி அவர்கள் பேசுகையில்,

நடிகர் திரு சூரி அவர்கள் பேசகையில்,

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். இந்த நாளில் என்னை விழாவிற்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி. தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக தலைவி கவிதா அவர்கள் அழைத்ததில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். நாம் இந்த நிமிடம் இந்த நொடி கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் சாதாரணமாக கிடைத்தது அல்ல.
இதற்கு பின்னால் பலரது உழைப்பும் தியாகமும் அடங்கி இருக்கிறது. எப்படி ஊரில் எல்லையில் இருக்கும் எல்லைச்சாமி நம்மை பாதுகாக்கிறதோ அதைப்போல நாட்டின் எல்லையில் இன்றளவும் நம்மை பாதுகாக்க உயிரைக் கொடுத்து போராடிக் கொண்டிருக்கின்றனர் ராணுவ வீரர்கள். சமீபத்தில் கூட எனது அருமை தம்பி மதுரையைச் சேர்ந்த லட்சுமணன் தற்கொலை படை மூலம் தனது இன்னுயிர் கொடுத்துள்ளார். அவரது தியாகம் சாதாரண தியாகம் அல்ல அவரது குடும்பத்தாருக்கும் அவரது அப்பா அம்மாவிற்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் நீங்கள் வானுயர தலை நிமிர்ந்து நடக்கக் கூடிய அளவிற்கு அருமையான புதல்வனை பெற்றெடுத்துள்ளீர்கள். உருக்கமாக தொடர்ந்து பேசிய திரு சூரி அவர்கள் தனது அடுத்த படம் மற்றும் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் விருமன் குறித்தும் ஒரு சில வார்த்தைகள் பேசினார்.

எனக்கும் என் குடும்பத்தாருக்குமே விருமன் படத்திற்கு டிக்கெட் இருக்கின்றனவா என கேட்டேன் அதற்கு இல்லை என திரை அரங்கில் இருந்து பதில் வந்தது, எனில் இதைவிட ஒரு படத்திற்கு ஆரோக்கியம் என்ன இருக்க முடியும். அந்த அளவிற்கு அமோக வெற்றி படத்திற்கு கிடைத்திருக்கிறது. தொடர்ந்து விடுதலை படம் குறித்து பத்திரிகையாளர்கள் சார்பாக கேள்விகள் கேட்கப்பட்டபோது பதிலளித்தார் திரு சூரி.

ஒரு காமெடி நடிகனாக இருந்து இப்போது இந்த நிலைவரை வந்து இருக்கிறேன் எனில் அதற்கு என்னுடன் பயணித்த அத்தனை இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தான் காரணம். முதன்முதலில் விடுதலை படத்தின் கதையை என்னிடம் வெற்றிமாறன் சார் சொல்லும்பொழுது இந்த கேரக்டரில் நிறைய சீன்கள் உள்ளன எப்படி இன்னும் இந்த கேரக்டரை வாங்கிவிடலாம் அல்லது அந்த கேரக்டர் நன்றாக இருக்கிறது என ஒவ்வொரு கேரக்டராக என் மனதுக்குள் யோசித்துக் கொண்டிருக்கையில் வெற்றிமாறன் சார் ‘நீங்க தான் மெயின் லீட் ‘ என்றார். அவர் கண் முன்பு என்னால் காட்டிக் கொள்ள முடியவில்லை. என்னை வெளியே விட்டிருந்தால் வானத்தில் பறந்திருப்பேன். சாதாரண காமெடியனாக இருந்தவனுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம் என்று கூறிய சூரி தான் கடந்து வந்த பாதை மூலம் தான் கற்றுக் கொண்ட அனுபவம் என்ன என்று மேலும் தொடர்ந்தார்.

எந்தத் துறை ஆனாலும் சரி முதலில் தன்னை தயார் செய்து கொள் உன் உடலை உன் ஆரோக்கியத்தை நீ முதலில் விரும்பு உன்னை நேசி அதைத்தான் என் அனுபவம் மூலம் கற்றுக் கொண்டேன். நான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை அத்தனை இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் என்னை நம்பி எனக்காக கொடுத்த வாய்ப்பு. மேலும் காமெடியனாக இருந்து சொல்ல வேண்டிய கருத்துக்கள் விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன என்னதான் நான் மெயின் கேரக்டராக நடித்தாலும் அதையும் நான் ஹீரோவாக பார்க்கவில்லை படத்தின் கேரக்டர் ஆக மட்டுமே பார்க்கிறேன். காமெடியன் சூரி என்பதே எனது அடையாளம் அதை எக்காலத்திலும் விடமாட்டேன். அதேபோல் எனது கேரக்டர் இப்படி மாறிவிட்டது நான் இத்தனை பேருடன் நடித்துக் கொண்டிருக்கிறேன் என சம்பளத்திலும் நான் எப்போதும் தீர்மானம் செய்ய மாட்டேன். அவர்கள் பார்த்து எனக்கு இப்போது வரை என்ன நியமித்தார்களோ என்ன கொடுக்கிறார்களோ அதைக் கொண்டுதான் என்னுடைய வாழ்க்கை பயணம் சென்று கொண்டிருக்கிறது. அவர்கள் கொடுக்கும் சம்பளம் அளவிற்கு என்னை நான் எப்படி தயார் செய்து கொள்ள முடியும் அதற்கு தகுதியானவனாக எப்படி மாற்றிக் கொள்ள முடியும் என்பதை மட்டுமே யோசிப்பேன். என்றவர் மேலும் விருமன் படத்தில் தன்னுடன் சேர்ந்து நடித்த அதிதி சங்கர் குறித்தும் சில வார்த்தைகள் பேசினார்.

தங்கை கீர்த்தி சுரேஷ் கொஞ்சம் அதிகமாக பிடிக்கும் . மற்ற ஹீரோயின்களையும் பிடிக்கும். தற்போது விருமன் பட நாயகி அதிதி. அவரது பெயரை சரியாக உச்சரிக்கவே பலவிதமாக பயிற்சி எடுத்துக் கொண்டேன். ஒரு கூட்டத்திற்குள் நுழைந்தால் இருக்கும் அத்தனை பேரின் பெயர்களையும் மிகச் சரியாக மனதில் ஏற்றி விடும் அளவிற்கு திறமையானவர் . கேரக்டரை உள்வாங்கி நடிப்பதில் திறமைசாலி. நிச்சயம் அதிதி சங்கருக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. மிகப்பெரிய நடிகையாகும் அத்தனை வாய்ப்புகளும் உள்ளன. என்ற சூரி ஒரு நாளில் 30 நிமிடங்கள் உடற்பயிற்சிக்கு ஒதுக்குங்கள் 30 சதவீதம் உடற்பயிற்சி எனில் 70 சதவீதம் நாம் உண்ணும் உணவுதான். எதை சாப்பிட்டாலும் அளவாக சரியான நேரத்தில் சாப்பிட கற்றுக் கொள்ளுங்கள். மிக்ஸி போல மேல மேல அரைக்காதீர்கள் என அழுத்தமாகவே உடல் ஆரோக்கியம் குறித்து பேசினார். திரு சூரி பேசி முடிக்க அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி விழா இனிதே நிறைவடைந்தது..