“லோக்கல் சரக்கு “இசை வெளியீட்டு விழா

மக்கள் சினிமா பார்த்தால் தான் நாங்கள் வாழ முடியும் – லோக்கல் சரக்கு இசை வெளியீட்டு விழாவில் ராதாரவி ஓப்பன் டாக்!

சுறா, அழகை மலை போன்ற படங்களை இயக்கிய எஸ்.பி. ராஜ்குமார் இயக்கத்தில் டான்ஸ் மாஸ்டர் தினேஷ் மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கும் நகைச்சுவை திரைப்படம் “லோக்கல் சரக்கு”. டிஸ்கவர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தினை தயாரித்ததோடு பாடல்களுக்கு இசையமைத்தும் உள்ளார் சுவாமிநாதன் ராஜேஷ். இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

ஒரு சாதாரண மனிதன் குடிப்பதற்காக ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு தனது நண்பனுடன் செல்வதுதான் படத்தின் கதை. கதைக்களம் அதை சுற்றியே நகர்கிறது. சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று தற்போது முழுவதுமாக முடிவடைந்து விட்டது. உபாசனா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் இமான் அண்ணாச்சி, சென்றாயன், வையாபுரி, ரெமோ சிவா, சாம்ஸ், வினோதினி மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

லோக்கல் சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் ராதாரவி, சினேகன், இசையமைப்பாளர் தீனா,  சங்கர் கணேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். மேலும் படத்தின் நடிகர், நடிகைகளும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி பேசுகையில், ‘டி. ராஜேந்தர் எல்லா வேலையும் செய்வார். அவர் சகலகலா வல்லவர். லோக்கல் சரக்கு என தலைப்பு வைத்ததாலேயே இந்தப்படம் நன்றாக ஓடும். சரக்கு போட்டுவிட்டால் படம் புரியாது. லோக்கல் சரக்கு இல்லை என்றால் எந்த அரசையும் நடத்த முடியாது

குடியை நிறுத்த முடியும் என்று சொன்னால் இரவு நிறுத்தினேன் காலை ஆரம்பித்தேன் என்பார்கள்.

கடைகள் இல்லாத மாநிலம் உள்ளது என்பார்கள். நாங்கள் அப்படி பழகிவிட்டோம். ஒரு முறை குடித்துவிட்டு மீண்டும் குடிக்கிறார்கள். சினிமாவை மக்கள் தற்போது பார்ப்பதே இல்லை. ஆனால், டாஸ்மாக் அப்படியா? கூட்டம் அதிகமாக இருக்கும். சினிமாவில் டிக்கெட் வாங்குவதுபோல மது வாங்குகிறார்கள். மனோரமா அவர்கள் எனக்கும் ஜோடி, என் அப்பாவிற்கும் ஜோடி, என் அண்ணனுக்கும் ஜோடியாக இருந்து உள்ளார். அப்படிப்பட்ட பெருமை அவருக்கு சேரும். ஒரே ஆள் படம் வாங்குகிறார் என்று சொல்கிறார்கள். அதனால் தான், கமல் படம் 100 நாட்கள் ஓடுகிறது. நான் 100 நாட்கள் பார்த்தே ரொம்ப நாள் ஆகிறது.

தவறான தலைப்பை வைத்தால் தான் மக்கள் பார்க்கிறார்கள். நல்ல தலைப்பை வைத்தால் பார்க்கமாட்டார்கள். சினிமா பார்த்தால் தான் நாங்கள் வாழ முடியும். அப்படி தான் இது மாதிரி நிகழ்வுகளில் பேச முடியும். விமர்சனம் 3 நாட்கள் கழித்து எல்லாம் எழுத வேண்டாம். எப்போது வேண்டுமானாலும் எழுதலாம். முதல் காட்சி பார்க்கும் போது விமர்சனம் சொல்லி விடுகின்றனர்’ எனப்பேசினார்.

தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில் ராஜேஷ் ஒரு சிறந்த இசையமைப்பாளர். இப்படத்தின் பாடல்களை நான் கேட்டேன் அனைத்தும் மிகவும் நன்றாக இருந்தன. ராஜேஷ் இசையமைப்பாளர் சங்கர் கணேஷிடம் பயிற்சி பெற்றவர் என்பதால் நிச்சயம் அவரின் திறமை வெளிப்படும். சங்கர் கணேஷ் தெய்வபக்தி, தேசபக்தி மற்றும் கொண்டவர் அல்ல முதலாளிகள் மீதும் மிகுந்த பக்தி கொண்டவர். அன்றைய காலத்தில் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் எல்லாருமே முதலாளிகள் மீது மரியாதையுடன் இருந்தவர்கள்தான். அது போல மரியாதையானவர்களை இன்று பார்க்க முடியாது என்றார்.

மேலும் அவர் பேசுகையில் ஒரு தயாரிப்பாளர் எத்தனை லட்சம் பணம் செலவு செய்து படம் எடுக்கிறார்கள். அவர்களை கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒரு படத்திற்கு இசையமைக்க மனசாட்சியே இல்லாமல் எவ்வளவு தொகை வசூலிக்கிறார்கள்

தெரியுமா. தயாரிப்பாளர்களாக இருந்தவர்கள் பல கோடி ரூபாய் செல்வது செய்து ஒரு படம் எடுத்து நடுத்தெருவுக்கு வந்தவர்கள் கூட இருக்கிறார்கள். உங்களின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர்களை நினைத்து பாருங்கள். அது தான் நன்றி கடன். ஆனால் யாரும் அதை நினைப்பது கூட இல்லை என்று மிகவும் வருத்தப்பட்டு கூறினார்.

தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் ராஜேஷிற்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் இன்று தயாரிப்பாளராகி விட்டார்கள். ஆனால் இனி நீங்கள் படம் தயாரிக்க கூடாது. 100க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை கொடுத்த ஆர்.பி. சௌத்ரி சொல்லி இருக்கிறார் பாவம் பண்ணவன் தான் பட தயாரிப்பாளனாக வருவான். தமிழ் சினிமா துறையில் மரியாதை இல்லை. பாவம் பண்ணியவன் தான் அங்கு படம் எடுப்பான் என்று கூறியதாக கே.ராஜன் கூறினார். உங்களின் தாய் தெய்வமாய் இருந்து உங்களை ஆசிர்வதிப்பார். இப்போது நீங்கள் படம் எடுக்க வேண்டாம். ஒரு ஐந்து, பத்து படங்களுக்கு இசையமைத்து அதன் மூலம் நன்றாக சம்பாதித்து பிறகு படம் எடுக்க வாருங்கள். படம் கேட்பது ஒரு டார்ச்சர் என மேடையில் கூறினார் கே.ராஜன்.

கே.ராஜன் பேசுகையில் குறுக்கிட்ட நடிகர் சென்றாயன் எங்கள் தயாரிப்பாளர், எங்களின் முதலாளி அவர் படம் எடுத்தால்தான் எங்களுக்கு வேலை என கூறினார். அப்போது மேடையில் சென்றாயனை பார்த்து கே. ராஜன் “போய் உட்காரு. நங்கள் வேற வேல வாங்கி தரோம்… அவங்களுக்கு வேல இல்லாம ஆகிவிட கூடாது… பெருசா பேச வந்துட்டாரு…” என்றார்.

பத்து வருஷமா படம் எடுத்தவங்க எங்க? உங்களுக்கு வேல தர்றதுக்காக நாங்க வெளிய போகணுமா? நாங்க வாழ்க்கையை இழக்கணுமா… தயாரிப்பாளராக இருப்பது எவ்வளவு டார்ச்சர் என்பது எங்களுக்கு தெரியும். நடிகனுக்கு தெரியாது. அவர்கள் சுகம் காணுபவர்கள். நீங்க நன்றியோடு இருக்கீங்களா உங்களின் வாய்ப்பு வரும் போது பேசுங்க. நான் பேசும்போது குறுக்கே வராத” என்று மிகவும் கடுமையாக பேசினார் தயாரிப்பாளர் கே. ராஜன்.

மேலும் ராஜேஷிற்கு அறிவுரை கூறுகையில் இசையில் கவனம் செலுத்துங்கள். படம் எடுக்க தொடங்கி விட்டால் மியூசிக் வராது. தனியா கவனம் செலுத்த இயலாது, அதனால் தான் முதலில் இசையில் வெற்றி பெற்ற பிறகு படம் எடுங்கள் என்றார் கே. ராஜன்.

கவிஞர் சினேகன் பேசுகையில், “பொதுவாக ஒரு படத்தின் இசை

வெளியீட்டு நிகழ்ச்சிக்கு நடிகர், நடிகைகள் தான் வர மாட்டார்கள். ஆனால், பாடல் ஆசிரியர் கூட வராமல் உள்ளனர். ஒரு படத்தில் ஒப்புக்கொண்டால் அந்த படம் திரைக்கு வரும் வரை அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. கவிஞர்களுக்கும் அந்தப் பொறுப்பு உள்ளது.இயக்குநர்கள், எழுத்தாளர்களாக இருப்பது அபூர்வம். நல்ல எழுத்தாளர்கள் படம் வெற்றி பெற வேண்டும். நிறைய கலைஞர்களுக்கு இது ஒரு சாபக்கேடு, கலைஞர்கள் வெற்றிபெறும்போது அதைப்பார்க்க அவர்களது பெற்றோர்கள் இருப்பது இல்லை. விமர்சனம் ஒருவரை செதுக்க வேண்டுமே தவிர, சிதைக்கக்கூடாது.

யூ-ட்யூப் தலைப்பு ஒன்றாக உள்ளது. ஆனால் உள்ளே வேறு ஒரு செய்தி இருக்கும். இது போன்று செய்ய வேண்டாம். 3 நாட்களுக்குப் பிறகு தான் விமர்சனம் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் சொல்லி உள்ளது. அதை கடைபிடித்தால் சிறப்பாக இருக்கும்’ எனக் கேட்டுக்கொண்டார்.

பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில், ‘லோக்கல் சரக்கு என்று சொல்லும்போது சரக்கு என்பது மதுபானம் மட்டும் இல்லை. இந்தியாவில் உற்பத்தி ஆகும் பொருட்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். ஒரு நாடு உள்நாட்டில் உற்பத்தி செய்யும் பொருட்களை பயன்படுத்தினால் அந்த நாடு வளம் அடையும்.

என்னுடைய படம் வெளியாகும்போது என்னுடைய தயாரிப்பாளர் நான் இருக்கும் தெருவிற்குக்கூட வரக்கூடாது என்றார். வெற்றி தான் சினிமாவில் நண்பன். புலன்விசாரணையில் வெற்றிபெற்றார். உடனே அடுத்த படத்திற்கு பேச ஆரம்பித்தார். தயாரிப்பாளர் வேதனை குறித்து தான் ராஜன் பேசி உள்ளார். என் கஷ்டத்திற்கு நான் தான் காரணம் என்பதை புரிந்துகொண்டால் போதும்.நான் இயக்குநராக இருக்கும்போது பல கோடிகள் என் கையில் இருந்தது. சாலிகிராமத்தில் நான் ஒரு வீடு வாங்கினேன். அந்த தெருவை வாங்கும் அளவிற்கு என்னிடம் பணம் இருந்தது. ஆனால், தயாரிப்பாளர் ஆன பிறகு என் வீட்டைப் பாதுகாக்க முடியாத சூழல் வந்து விடுமோ என்ற பயம் இருந்தது.

தயாரிப்பாளர்கள் ஒன்றாக இணைந்து ஒரு கட்டமைப்பை உருவாக்கினால் தான் சுமூகமாக இருக்க முடியும். திரைப்படத்துறையில் அனைவரும் பகி

ர்ந்து கொண்டால் தான் லாபம் வரும். நஷ்டம் தயாரிப்பாளருக்கு; லாபம் மற்றவர்களுக்கு என்று தற்போது மாறியுள்ளது” என்றார்.