காக்கி உடையில் மிரட்டும் பரத்
லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ், தீனா ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இப்படத்தில் முன்னணி நடிகரான பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீசெந்தில்.
இவர் நாளைய இயக்குநர் சீஸன்= இல் இறுதிபோட்டி வரை முன்னேறியவர் என்பதும், இவருடைய சக போட்டியாயராக கலந்துகொண்டவர்கள் ‘ரெமோ ’ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் மற்றும் ‘குரங்கு பொம்மை ’ இயக்குநர் நித்திலன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ஒளிப்பதிவை கவனிக்கிறார் சுரேஷ் பாலா. இவர் பிரபல ஒளிப்பதிவாளர்களான வேல்ராஜ் மற்றும் பாலசுப்ரமணியெம் ஆகியோர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர். இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.
படத்தைப் பற்றி அறிமுக இயக்குநர் ஸ்ரீசெந்தில் பேசும் போது,‘ சஸ்பென்ஸ் திரில்லராக இப்படம் உருவாகியிருக்கிறது. இதில் பரத் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருடன் கண்ணதாசனின் பேரனான ஆதவ் கண்ணதாசன் மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோரும் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நாயகி கேரக்டரில் நடிப்பதற்காக முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இறுதியானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம். இப்படத்தின் படபிடிப்பு விஜயதசமியான இன்று முதல் தொடங்குகிறது.’ என்றார்.
‘இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை தீபாவளியன்று வெளியிடப்படும் ’ என்று தயாரிப்பாளர்களில் ஒருவரான M.S. சிவநேசன் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.