“சாதனையாளர்களின் ஒரு அங்கீகாரமாக ‘லிப்ரா அவார்ட்ஸ்’ மாறும்” ; தயாரிப்பாளர் நம்பிக்கை!

சினிமாவில் நாளுக்கு நாள் குறும்படங்களின் தாக்கம் அதிகமாகிக்கொண்டுதான் போகிறது.. ஒரு காலத்தில் உதவி இயக்குனர் வாய்ப்புக்காக கால்கடுக்க சுற்றியலைந்தவர்கள், பத்து வருடம் உதவி இயக்குனர்களாகவே காலத்தை கழித்துவிட்டு பின் வாய்ப்பு தேடுபவர்கள் என வழக்கமான பாதையில் செல்லாமல் குறும்படம் மூலமாக தனது திறமை இதுதான் என வெளிச்சம்போட்டு காட்டி அதையே தனது விசிட்டிங் கார்டாக மாற்றி படம் பண்ணும் இளைஞர் கூட்டம் ஒன்று சினிமாவுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக நுழைந்துகொண்டு இருக்கிறது..

அப்படி நுழைபவர்களுக்கான வாசல் குறுகியதாகவே இருக்கிறது. அந்த வாசலை விரியத்திறந்து வைத்து படைப்பாளிகளுக்கு ஒரு அற்புதமான மேடை அமைத்து கொடுக்கும் வேலையை கையில் எடுத்துள்ளது லிப்ரா புரடக்சன்ஸ். தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் தயாரிப்பு நிறுவனங்களில் குறிப்பிட்டு சொல்ல கூடியவற்றில் ஒன்றுதான் லிப்ரா புரடக்சன்ஸ்..

நளனும் நந்தினியும், சுட்ட கதை, விரைவில் வெளிவர இருக்கும் ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள இந்த நிறுவனம், தற்போது குறும்பட இயக்குனர்களின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டுவதற்காக குறும்பட போட்டி ஒன்றை மிக பிரமாண்டமாக நடத்த இருக்கிறது.

இந்த குறும்பட விருது விழா நடத்த வேண்டிய அவசியம் என்ன..?

ஒரு திரைப்பட தயாரிப்பாளராக இருந்துகொண்டு இந்த குறும்பட விழாவை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்கிற சந்தேகத்தை, லிப்ரா புரடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரிடமே கேட்டோம்..

பொதுவா குறும்படம் எடுக்கிறவங்க கொஞ்சம் செலவு செஞ்சு, யாரோ ஒரு சில சினிமா பிரபலங்களை கூப்பிட்டு, திரையிட்டு காட்டி அந்த பாராட்டோட சந்தோஷப்பட்டு நின்னுடறாங்க.. இன்னும் சிலர் அதை வைத்து யாரிடமாவது உதவி இயக்குனரா சேர்றாங்க.. அப்படி இல்லைன்னா அதையே படம் இயக்குறதுக்கு அனுபவமா நினைத்து வாய்ப்பு தேட ஆரம்பிச்சிடுறாங்க..

ஆனா சினிமாவுல இருக்குறவங்களுக்கு எப்படி விருதுகள் தான் பாராட்டா அமையுதோ அதேபோல சினிமாவுல நுழையணும் அப்படிங்கிற கனவோட ஒரு வெறியோட குறும்படங்களை இயக்குறவங்களுக்கு நிச்சயம் விருதுகள் தான் பாராட்டும் ஊக்கமுமா அமையும்.. அப்படிப்பட்ட ஒரு களத்தை அவர்களுக்கு அமைச்சு கொடுக்கிறதுக்காகத்தான் இந்த குறும்பட திருவிழாவை நடத்துறோம்” என்கிறார்.

சரி இதை நடத்துவதால் உங்களுக்கு என்ன லாபம்..?

குறும்பட விழாக்கள் நடத்துறது ஒரு சேவை மட்டுமல்ல.. இதுக்கு வர்த்தக ரீதியா ஒரு ஓப்பனிங் இருக்குது.. ஆனா நாம் இன்னைக்கு விதை போடுறோம்.. அதோட பலன் கிடைக்க நமக்கு கொஞ்ச நாளாகும் இல்லையா.. அதேசமயம் பணம், லாபம் அப்படிங்கிறத தாண்டி இந்த குறும்பட விழா மூலமா திரையுலகுக்கு நிறைய டெக்னீசியன்களை அறிமுகப்படுத்துறோம் இல்லையா.. நாளைக்கு அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அங்கே லிப்ரா விருது வாங்கிருக்கேன்னு அவங்க அதை ஒரு அங்கீகாரமா சொல்லுவாங்கள்ல.. அதுதான் நாங்க எதிர்பார்க்கிற பலன்.

ஒரு 20 நிமிட குறும்படம் மூலமா நம்மால பத்து லட்சம் ரூபாய் சம்பாதிக்க முடியுதுன்னா, இதே அர்ப்பணிப்பையும் உழைப்பையும் திரைப்படத்துல காட்டுனா அந்த தயாரிப்பாளருக்கு எவ்வளவு லாபத்தை நாம் கொடுக்க முடியும் அப்படிங்கிற உந்துதலை ஒவ்வொரு படைப்பாளிக்கும் இந்த விருது ஏற்படுத்தும்.

என்னால எல்லோருக்கும் படம் கொடுக்க முடியாது.. ஆனா அவங்களுக்கு படம் கிடைக்கிறதுக்கான வாய்ப்பையும் அவங்களுக்கான பாராட்டையும் ஏற்படுத்தி தரமுடியும்.. வருங்காலத்துல லிப்ரா அவார்ட்ஸ் அப்படின்னா திரையுலகத்துல மிக மரியாதையான ஒரு விஷயமா மாறனும்.. இதுதான் இந்த குறும்பட விருது விழா நடத்துறதோட நோக்கம்.” என்கிறார் ரவீந்தர் சந்திரசேகரன் தெள்ளத்தெளிவாக….

போட்டியை பற்றி ….

இந்த குறும்பட போட்டியில் கலந்துகொள்ள வரும் ஜூலை-15 தான் போட்டியாளர்கள் தங்களது படைப்பை அனுப்பவதற்கான கடைசி நாளாகும். ஒவ்வொரு குறும்படமும் 17 நிமிடங்களுக்கு அதிகமான கால அளவில் இருக்க கூடாது.. ஆங்கிலத்தில் சப் டைட்டில்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்

மிகச்சிறந்த குறும்படம் என்கிற ஒரு பிரிவில் மட்டுமல்லாமல் மிகச்சிறந்த குறும்பட இயக்குனர், நடிகர், நடிகை, நகைச்சுவை நடிகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என திரைப்படங்ளை போன்றே பல பிரிவுகளிலும் போட்டியாளர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர்..

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்கள், தொழிநுட்ப கலைஞர்கள் இந்த குறும்படங்களை பரிசீலித்து அதில் சிறந்த பத்து குறும்படங்களை தேர்ந்தெடுப்பார்கள்.. அந்த பத்து படங்களும் விழா நடைபெற இருக்கும் ஒரு குறிப்பிட்ட நாளில் மொத்தமாக திரையிடப்பட்டு அதில் அனைத்து பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்றவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.. அன்று மாலையே பரிசளிப்பு விழா மிகப்பெரிய அளவில் நடைபெற இருக்கிறது.

முதல் பரிசாக 10 லட்சம், 2ஆம் பரிசாக 7 லட்சம் மற்றும் 3ஆம் பரிசாக 5 லட்சம் ரூபாய் என பரிசு தொகைகள் வழங்கப்பட இருக்கின்றன. இதில் இன்னொரு சிறப்பு அம்சமாக மீதி உள்ள ஏழு குறும்படங்களுக்கும் சிறப்பு பரிசாக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

உங்கள் குறும்பட சிடிகளை No.14, 1st Cross Street, Lambert Nagar, AlwarThirunagar, Chennai – 87 எனும் முகவரிக்கு அனுப்பலாம். விவரங்களுக்கு Mobile: 97899 16561, Office: 044 – 4208 9658 இந்த எண்களை தொடர்புகொள்ளலாம்.

இந்த போட்டி குறித்த அடுத்தகட்ட விபரங்களை லிப்ரா புரடக்சன்ஸ் பேஸ்புக் பக்கத்தின் மூலம் அவ்வப்போது போட்டியாளர்கள் தெரிந்துகொள்ளலாம்.

https://www.facebook.com/LIBRAShortFilmAwards/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *