நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் சிறந்த பெண் இயக்குநராக தமிழ் சினிமாவில் தன்னை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். வழக்கமான சினிமாக்களில் இருந்து மாறுபட்டு, சமுதாயத்தை பிரதிபலிக்கும் சினிமாக்களை கொடுக்கும் முயற்சியில் எப்போதுமே இருப்பவர்.
‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’ ஆகிய வித்தியாசமான படங்களை தமிழ்ச் சினிமாவுக்குக் கொடுத்திருக்கும் பெருமைமிக்க பெண் இயக்குநர். இப்போது அவர் தனது அடுத்த படைப்பாக ‘ஹவுஸ் ஓனர்’ என்கிற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்தப் படத்தில், ‘பசங்க’ புகழ் கிஷோர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் நாயகியாக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார். மேலும் ‘ஆடுகளம்’ கிஷோர் படத்தின் தலைப்பு சுட்டிக் காட்டும் கேரக்டரில் நடிக்கிறார்.
‘மகளிர் மட்டும்’ புகழ் பிரேம் படத் தொகுப்பு செய்கிறார். கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவு செய்கிறார். படத்துக்கு பின்னணி இசை மட்டுமே தேவைப்படுவதால் முழு படப்படிப்பையும் முடித்த பின்னரே இசையமைப்பாளர் தேர்வு செய்யப்படுவாராம்.
சென்னை வெள்ளத்தின்போது நடக்கும் ஒரு சம்பவம்தான் படத்தின் கரு. முழுக்க, முழுக்க காதல் கதையாக அதே சமயம் வித்தியாசமான திரைக்கதையில் உருவாகிறது இந்தப் படம். இதில் தீவிரமான காதல் கதை இருந்தாலும், படத்தில் பாடல்களே இல்லையாம். சென்னை வெள்ளம் சார்ந்த எந்த ஒரு காட்சியும் இருக்காதாம். இதுவே கதை எவ்வளவு வித்தியாசமாக இருக்கும் என்கிற ஆர்வத்தை தூண்டுகிறது.
இந்தப் படம் பற்றி இயக்குநர் லஷ்மி ராமகிருஷ்ணன் பேசுகையில், “ஆரம்பத்தில், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை வைத்து இதே ‘ஹவுஸ் ஓனர்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை எடுக்கும் யோசனை எனக்கு இருந்தது.
ஆனால் அந்த நேரத்தில் கதையின் முதல் டிராஃப்ட் மட்டுமே தயாராக இருந்ததால், அது தொடங்கப்படவில்லை. இடையில், சம்பந்தப்பட்ட நடிகர், நடிகை இருவருமே அவரவர் வேலைகளில் பிஸியாகிவிட்டனர். மேலும், இப்போது அவர்கள் தங்களுடைய கமிட்மெண்ட்டுகளை முடித்து விட்டுத்தான் திரும்ப வருவார்கள் என்பது புரிந்தது.
இது தவிர, என் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘சொல்வதெல்லாம் உண்மை’யை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஸ்கிரிப்டை ‘ப்ளூ இன்க்’ என்ற தலைப்பில் எழுதி வைத்திருந்தேன்.
ரியாலிட்டி ஷோவின் தற்காலிக தடை காரணமாக, ஜூன் 10-ம் தேதி தொடங்க வேண்டிய படப்பிடிப்பில் இறங்க எனக்கு தயக்கமாக இருந்தது. அப்பொழுதே அதன் சேட்டிலைட் மற்றும் வெளிநாட்டு உரிமைகள்கூட உறுதி செய்யப்பட்டுவிட்டன.
இதற்கு மேலும் காத்திருப்பது வீணானது என்பதை உணர்ந்து கிடைத்த நட்சத்திரங்களை வைத்து உடனேயே இந்த ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை ஆரம்பித்துவிட்டேன்.
முன்னணி நடிகர்கள் பங்கு பெற்ற இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. ‘ஹவுஸ் ஓனர்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ஆடுகளம்’ கிஷோர், என்னை போலவே படத்தின் மீது மிகுந்த நம்பிக்கையுடன் உற்சாகமாக இருக்கிறார்.
அடுத்த வாரம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்குகிறது, மேலும் இரண்டு கட்ட படப்பிடிப்போடு, செப்டம்பர் மாதத்தில் முழு படத்தையும் முடிக்க திட்டமிட்டிருக்கிறோம்…” என்றார்