Annadurai Press Release

ஆர் ஸ்டுடியோஸ் ராதிகா சரத்குமார், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரிக்க விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் அண்ணாதுரை. அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு இசை அமைப்பதோடு, படத்தொகுப்பையும் கூடுதலாக கவனித்திருக்கிறார் நாயகன் விஜய் ஆண்டனி. நவம்பர் 30ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை பிக்சர் பாக்ஸ் கம்பெனி அலெக்ஸாண்டர் வெளியிடுகிறார். இந்த படத்தின் இசை வெளியீடு சென்னை சத்யம் சினிமாஸில் நடைபெற்றது. 
 
நான் பேரறிஞர் அண்ணாதுரையின் தீவிர ரசிகன். அந்த பெயரை தலைப்பாக வைத்திருப்பதால் இந்த படத்தை நானும் வாங்கியிருக்கிறேன். இந்த படத்தில் ரசிகர்களுக்கு தேவையான நல்ல செண்டிமெண்டும் இருக்கிறது. விஜய் ஆண்டனிக்கு நிச்சயம் இது ஒரு வெற்றிப்படமாக அமையும் என்றார் அபிராமி ராமநாதன்.
 
பறவை அமர்ந்திருப்பது கிளையை நம்பி அல்ல, சிறகை நம்பி என்ற பழமொழிக்கேற்ப   வாழ்ந்து வரும் விஜய் ஆண்டனிக்கு சிறகாக அவரது மனைவி ஃபாத்திமா விஜய் ஆண்டனி இருக்கிறார். படத்தில் ஜிஎஸ்டி பற்றி ஒரு பாடலில் எழுதி இருந்தேன். ஆனால் சென்சாரில் அது கட் ஆகி விட்டது என்றார் பாடலாசிரியர் அருண் பாரதி. 
 
ஒவ்வொரு முதல் பட இயக்குனருக்கும் முதல் பட வாய்ப்பு என்பது சாதாரணம் அல்ல. இப்போது முதல் பட இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் ஹீரோக்களும், தயாரிப்பாளர்களும் குறைந்து விட்டனர். விஜய் ஆண்டனி தான் நிறைய இயக்குனர்களை அறிமுகப்படுத்தி வருகிறார். அறம் போல நல்ல சினிமாக்கள் வந்து தமிழ் சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும் என்றார் இயக்குனர் வசந்தபாலன். 
 
அண்ணாதுரை தலைப்பை வைத்து விட்டு, தவறான படத்தை எடுக்க மாட்டார்கள். சர்ச்சைக்காக தலைப்பு வைப்பவர்கள் அல்ல சர்த்குமாரும், விஜய் ஆண்டனியும். இந்த படத்துக்கு சர்ச்சை என எதுவும் தேவையில்லை, கதையே போதும். உங்கள் சொந்த தயாரிப்பை தாண்டி வெளி தயாரிப்பாளர்களுக்கும் கொஞ்சம் வாய்ப்பு கொடுங்கள் என்றார் தயாரிப்பாளர் சிவா. 
 
மோடி ஒன் இந்தியா ஒன் டேக்ஸ் என்ற கொள்கையில் தான் ஜிஎஸ்டி கொண்டு வந்தார். ஆனால் தமிழ்நாட்டில் எண்டர்டெய்ன்மெண்ட் டேக்ஸ் கூடுதலாக வசூலிப்பது சினிமாவையும், தயாரிப்பாளர்களையும் பாதிக்கிறது. அரசுக்கு நெருக்கமாக இருக்கும் சரத்குமார் அதை பற்றி நமது தமிழ்நாடு அரசிடம் எடுத்து சொல்லி அதை நீக்க வலியுறுத்த வேண்டும் என்றார் காட்ரகட்டா பிரசாத்.
 
எந்த வீட்டில் பெண்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறதோ அங்கு வெற்றி அதிகம் இருக்கும். அந்த வகையில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இருப்பது விஜய் ஆண்டனியின் வெற்றிக்கு முக்கிய காரணம். நல்ல கதைகளாக தேர்வு செய்து படத்துக்கு படம் எல்லைகளை கடந்து கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. மழை உட்பட எந்த எதிர்ப்பு வந்தாலும் அண்ணாதுரை வெற்றி பெறும் என்றார் தனஞ்செயன்.
 
கதைத்தேர்வில் விஜய் ஆண்டனிக்கு நிகர் அவரே தான். காளி படத்தின் கதையை சொல்லும் முன்னர் அவரிடம் நான் வேறு ஒரு கதையை சொன்னேன், அவர் மிகவும்  வெளிப்படையாக அந்த கதை பிடிக்கவில்லை என சொல்லி நிராகரித்தார். அதுதான் அவர் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்றார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.
 
அண்ணாதுரைனு தலைப்பு வச்சிருக்கீங்க, ரிலீஸ் நேரத்தில் ஐடி ரெய்டு வரலாம், தலைப்பை மாற்ற சொல்லி சிலர் வரலாம், ஜாக்கிரதையாக இருங்கள் என்றார் நடிகர் உதயநிதி ஸ்டாலின். 
 
விஜய் ஆண்டனியை அண்ணாதுரையாக உயர்த்தியிருக்கிறார்கள் ரசிகர்கள். சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், மெகா ஸ்டார் எல்லாத்துக்கும் அடிப்படை ரசிகர்கள் தான். அவள், அறம் போன்ற சின்ன படங்கள் எல்லாம் பெரிய வெற்றியை பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. எந்த சோதனையும் எளிதாக கடந்து வரும் ராதிகா இந்த படத்தை தயாரித்திருக்கிறார். அண்ணாதுரைனு தலைப்பு வைத்த விஜய் ஆண்டனிக்கு விருப்பம் இருக்கோ, இல்லையோ ரசிகர்கள் தெளிவாக இருக்கிறார்கள். விஜய் ஆண்டனி மிகவும் தன்னம்பிக்கையோடு இருக்கிறார், நிச்சயம் படம் வெற்றி பெறும் என்றார் இயக்குனர் பாக்யராஜ்.
 
ஒவ்வொரு விஷயத்திலும் விஜய் ஆண்டனி தன்னை நிரூபித்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து வருகிறார். ஆனால் இதே தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் சரியாக படப்பிடிப்புக்கு வருவதில்லை என தயாரிப்பாளர் சங்கத்துக்கு புகார்கள் வந்திருக்கிறது. ஒரு நடிகர் 29 நாட்கள் மட்டுமே படப்பிடிப்புக்கு வந்திருக்கிறார். எடுத்தவரை ரிலீஸ் செய்யுங்கள் என சொல்கிறார். அந்த நடிகரால் தயாரிப்பாளருக்கு 18 கோடி நஷ்டத்தில் இருக்கிறது. ஒரு பிரபல காமெடி நடிகரும் அந்த புகாரில் சிக்கி, தயாரிப்பாளர்களை காயப்படுத்தி இருக்கிறார். அப்படிப்பட்ட சிலர் இருக்கும் இந்த இண்டஸ்ட்ரியில் விஜய் ஆண்டனி மாதிரி இரவு பகலாக உழைக்கும் நடிகர்களை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் மனதுக்காகவே படம் பெரிய வெற்றி பெறும் என்றார் ஞானவேல் ராஜா. 
 
 
வாழ்க்கையில் உழைப்பையும், உண்மையையும் மட்டும் தான் எப்போதும் நம்புவேன். எதற்கும் பயப்படவே மாட்டேன். யார் எப்போது அழைத்தாலும் இரவு, பகல் பாராமல் அங்கு போய் உதவி செய்பவர் சரத்குமார். அவர் தான் சீனிவாசனிடம் கதையை கேட்டு, என்னையும் கதை கேட்க வைத்தார். விஜய் ஆண்டனியை எனக்கு சன்டிவி காலத்திலேயே நன்றாக தெரியும். விஜய் ஆண்டனி தான் அந்த கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்றவுடன், அவரை  போய் கேட்க சொன்னேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, தனுஷ் மாதிரி உதவி செய்ய பலர் முன் வந்திருக்கிறார்கள். ஆனால் விஜய் ஆண்டனி எனக்காகவே படத்தை ஒப்புக் கொண்டு நடிக்க முன் வந்தார். பல உண்மையான மனிதர்கள், கொட்டிய உழைப்பு தான் இந்த அண்ணாதுரை. விஜய்னு பேர் வச்சாலே பூனை மாதிரி ரொம்ப அமைதியா இருப்பாங்க, அது ஜோசப் விஜயா இருந்தாலும் சரி, விஜய் ஆண்டனியா இருந்தாலும் சரி. இது சூர்யவம்சம் மாதிரி ரொம்பவே பாஸிடிவ்வான படம் என்றார் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார்.
 
சர்ச்சைகள் இருந்தால் தான் படம் ஓடும் என்றில்லை, அண்ணாதுரை சர்ச்சை இல்லாமலேயே பெரிய வெற்றியை பெறும். அப்படிப்பட்ட கதை, திரைக்கதையை எழுதி இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கிறார். இந்த மேடையில் அரசியல் பற்றி பேசக்கூடாது என முடிவெடுத்து நான் அண்ணாதுரையை பற்றி மட்டும் தான் பேச வந்தேன். விஜய் ஒரு நாள் சூப்பர் ஸ்டார் ஆவார் என்று நான் அன்றே சொன்னேன், அது மாதிரி விஜய் ஆண்டனியும் ஒரு நாள் சூப்பர் ஸ்டார் ஆவார். கருத்துக்களை தைரியமாக களத்தில் சொல்ல வேண்டும், ட்விட்டரில் சொல்லக் கூடாது என்றார் நடிகர் சரத்குமார்.
 
ஒரு மேடையில் இன்னொருவருக்காக இரண்டு மணி நேரம் செலவு செய்வது சாதாரண விஷயம் இல்லை. அப்படி எனக்கு ஆதரவாக இங்கு வந்தவர்களுக்கு நன்றி. என் வெற்றி என்பது தனி மனித வெற்றி அல்ல, எங்கள் கூட்டு முயற்சி என்றார் நாயகன் விஜய் ஆண்டனி.
 
தயாரிப்பாளர் அலெக்சாண்டர், திருப்பூர் சுப்ரமணியம், காட்ரகட்டா பிரசாத், அபிராமி ராமநாதன், இயக்குனர்கள் கௌரவ், விஜய் சந்தர், ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன், படத்தின் இயக்குனர் சீனிவாசன், நாயகிகள் டயானா சம்பிகா, மஹிமா, ஜூவல் மேரி, ஸ்டண்ட் மாஸ்டர் ராஜசேகர், ஒளிப்பதிவாளர் தில்ராஜ், கலை இயக்குனர் ஆனந்தமணி ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *