உடல் நலக்குறைவால் சிகிச்சை எடுத்துவந்த பாரதிராஜா, நேற்று வீடு திரும்பினார்.

மருத்துவமனையிலிருந்து இயக்குனர் பாரதிராஜா  வீடு திரும்ப உள்ள நிலையில், அவரது மகன் மனோஜ் மற்றும் எம்.ஜி.எம் மருத்துவ குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பாரதிராஜா மகனும், நடிகருமான மனோஜ், “பாரதிராஜா நலமுடம் உள்ளார் , பழைய பாரதி ராஜவாய் இனி பார்க்கலாம். இதற்காக எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு நன்றி. மருத்துவமனைக்கு பணம் செலுத்த முடியாமல் இருக்கிறார் என்பது எல்லாம் தவறான தகவல். எங்களுடைய சொந்த பணத்திலே மருத்துவ கட்டணத்தை செலுத்தினோம்.

ஏ.சி.சண்முகம், வைரமுத்து ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். திருசிற்றம்பலம் படத்தை பற்றி பேசினால் பாரதிராஜா மிகுந்த உற்சாகமடைகிறார். 5 படங்கள் இன்னும் பாரதிராஜா நடிக்க வேண்டி உள்ளது. விரைவில் படப்பிடிப்புகளுக்கு செல்வார். பாரதிராஜா மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது இளையராஜா வந்து பார்த்து விட்டு சென்றார். மிக விரைவில் பாரதிராஜா செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டு இருக்கிறார். அவருடைய படங்கள் பாடல்களை அவருக்கு , மருத்துவமனையில் போட்டு காண்பித்தோம். இதுவும் அவர் விரைந்து குணமடைய உதவியாக இருந்தது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நுரையீரல் மருத்துவ நிபுணர் சாமிகண்ணு பேசும்போது, “கடுமையான நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு, சுய நினைவு இழந்து மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் முழுமையாக பழைய உற்சாகத்துடன் இருக்கிறார். வயது மூப்பு காரணமாக நோய் எதிர்ப்பு திறன் குறைபாடால் இது போன்று தொற்றுகள் ஏற்படுவது இயல்பு. மருத்துவத்திற்கு பாரதிராஜா முழுமையாக ஒத்துழைத்தால் எளிமையாக அவரை குணப்படுத்த முடிந்தது. இன்று வீடு திரும்பினாலும் இன்னும் இரண்டு வாரங்களுக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார்” எனத் தெரிவித்தார்