அழகர் மலை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் டான்ஸ் மாஸ்டர் தினேஷ் மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கும் நகைச்சுவை திரைப்படம் ‘லோக்கல் சரக்கு’.
உபாசனா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் இமான் அண்ணாச்சி, சென்றாயன், வையாபுரி, ரெமோ சிவா, சாம்ஸ், வினோதினி மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
டிஸ்கவர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தினை தயாரித்ததோடு பாடல்களுக்கு இசையமைத்தும் உள்ளார் தயாரிப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷ்.
இந்த ‘லோக்கல் சரக்கு’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நேற்று காலை நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் ராதாரவி, சினேகன், இசையமைப்பாளர் தீனா, சங்கர் கணேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினர்.
தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில் “ராஜேஷ் ஒரு சிறந்த இசையமைப்பாளர். இப்படத்தின் பாடல்களை நான் கேட்டேன். அனைத்தும் மிகவும் நன்றாக இருந்தன. ராஜேஷ் இசையமைப்பாளர் சங்கர் கணேஷிடம் பயிற்சி பெற்றவர் என்பதால் நிச்சயம் அவரின் திறமை வெளிப்படும். சங்கர் கணேஷ் தெய்வ பக்தி, தேச பக்தி மற்றும் முதலாளிகள் மீதும் மிகுந்த பக்தி கொண்டவர். அன்றைய காலத்தில் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் எல்லாருமே முதலாளிகள் மீது மரியாதையுடன் இருந்தவர்கள்தான். அதுபோல மரியாதையானவர்களை இன்று பார்க்க முடியாது.
ஒரு தயாரிப்பாளர் எத்தனை லட்சம் பணம் செலவு செய்து படம் எடுக்கிறார்கள். அவர்களை கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒரு படத்திற்கு இசையமைக்க மனசாட்சியே இல்லாமல் எவ்வளவு தொகை வசூலிக்கிறார்கள் தெரியுமா..? பல கோடி ரூபாய் செலவு செய்து படம் எடுத்து நடுத்தெருவுக்கு வந்தவர்கள்கூட இருக்கிறார்கள். உங்களின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர்களை நினைத்து பாருங்கள். அதுதான் நன்றி கடன். ஆனால் யாரும் அதை நினைப்பதுகூட இல்லை.
தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் ராஜேஷிற்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் இன்று தயாரிப்பாளராகி விட்டார்கள். ஆனால், இனி நீங்கள் படம் தயாரிக்க கூடாது. 100-க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை கொடுத்த ஆர்.பி.சௌத்ரி சொல்லி இருக்கிறார் பாவம் பண்ணவன்தான் பட தயாரிப்பாளனாக வருவான் என்று..!
உங்களின் தாய், தெய்வமாய் இருந்து உங்களை ஆசிர்வதிப்பார். இப்போது நீங்கள் படம் எடுக்க வேண்டாம். ஒரு ஐந்து, பத்து படங்களுக்கு இசையமைத்து அதன் மூலம் நன்றாக சம்பாதித்து பிறகு படம் எடுக்க வாருங்கள்…” என்றார்.
கே.ராஜன் பேசுகையில் குறுக்கிட்ட நடிகர் சென்றாயன், “எங்கள் தயாரிப்பாளர்.. எங்களின் முதலாளி.. அவர் படம் எடுத்தால்தான் எங்களுக்கு வேலை..” என கூறினார். அப்போது கே.ராஜன் “போய் உட்காரு. நாங்கள் வேற வேல வாங்கி தரோம்… அவங்களுக்கு வேலை இல்லாமல் ஆகிவிட கூடாது. பெருசாபேச வந்துட்டாரு…” என்றார் கோபத்துடன்.
மேலும், “பத்து வருஷமா படம் எடுத்தவங்க எங்க? உங்களுக்கு வேல தர்றதுக்காக நாங்க வெளிய போகணுமா? நாங்க வாழ்க்கையை இழக்கணுமா…? தயாரிப்பாளராக இருப்பது எவ்வளவு டார்ச்சர் என்பது எங்களுக்கு தெரியும். நடிகனுக்கு தெரியாது. அவர்கள் சுகம் காணுபவர்கள். நீங்க நன்றியோடு இருக்கீங்களா.. உங்களின் வாய்ப்பு வரும்போது பேசுங்க. நான் பேசும்போது குறுக்கே வராத..” என்று மிகவும் கடுமையாக பேசினார் தயாரிப்பாளர் கே.ராஜன்.
மேலும் ராஜேஷிற்கு அறிவுரை கூறுகையில் “இசையில் கவனம் செலுத்துங்கள். படம் எடுக்க தொடங்கி விட்டால் மியூசிக் வராது. தனியா கவனம் செலுத்த இயலாது.. அதனால்தான் முதலில் இசையில் வெற்றி பெற்ற பிறகு படம் எடுங்கள்..” என்று பேசி முடித்தார் கே.ராஜன்.
விழா முடிந்த பிறகு தியேட்டர் வாசலில் மீடியாக்களுக்கு பேட்டியளித்த நடிகர் சென்றாயன், “கே.ராஜன் ஐயா மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நான் பேசியதில் ஒன்றே ஒன்றுதான் தவறு. அது யாரும் படம் எடுக்க வராதீங்கன்னு சொன்னது.. படம் எடுக்க தயாரிப்பாளர்கள் வரலைன்னா இந்த சினிமா தொழில் என்னங்க ஆகும்.. சினிமா தொழிலாளர்கள் என்ன ஆவார்கள்.. என்னை மாதிரி சினிமாவை மட்டுமே நம்பியிருக்குறவங்க எல்லாரும் என்ன செய்வாங்க.. இதனால்தான் நான் மேடையில் குறுக்கிட்டேன்..” என்று விளக்கமளித்தார்.