KV Thangabalu letter to Hon. Justice Raja reg. order on Tamil medium candidates
அன்புள்ள நீதியரசர் திரு. ராஜா அவர்களுக்கு,
வணக்கம்.
பொருள்: தமிழ் வழி பயின்றோருக்கு 20% இடஒதுக்கீட்டு ஆணையை
பின்பற்ற உத்தரவிட்டதற்கு நன்றி – பாராட்டு
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவுரையாளர் பணிக்காக விண்ணப்பித்த திருவண்ணாமலையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தாக்கல் செய்த மனு மீது தாங்கள் பிறப்பித்த உத்தரவு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவிகித முன்னுரிமை என்ற அரசாணையை கண்டிப்புடன் பின்பற்றுமாறு தாங்கள் உத்தரவிட்டிருப்பது, தாய் மொழி வழிக் கல்வியின் தேவையை பறைசாற்றும் வகையில் அமைந்திருக்கிறது. இதற்காக தங்களுக்கு நன்றி.பாராட்டுகள்.
தாய்மொழிக் கல்வியே சிந்தனைத் திறனை வளர்ப்பதற்கு அடிப்படையானது. 1949-ம் ஆண்டு அமைக்கப்பட்ட பல்கலைக்கழக கல்விக் ஆணையம், தாய்மொழிக் கல்வியின் அவசியம் பற்றி “கல்வி கண்ணோட்டத்தைக் கொண்டு பார்த்தாலும் சரி, ஜனநாயக சமூகத்தின் பொது நலனைக் கொண்டு பார்த்தாலும் சரி, பிரதேச மொழியில் கல்வி இருக்க வேண்டியது அவசியம். அவ்வாறு பயிலுவதுதான் அந்தந்த பகுதியின் இலக்கியத்தை செழுமைப்படுத்தவும், பண்பாட்டை வளர்க்கவும் அறிவியல் சாதனைகளை நிகழ்த்தவும் உதவும்¢” என்று குறிப்பிட்டுள்ளது.யுனெஸ்கோ போன்ற சர்வதேச நிறுவனங்களும் தாய் மொழிக் கல்வியையே வற்புறுத்துகின்றன.
தங்களது உத்தரவின் மூலம் தாய்மொழி வழிக் கல்வி வழங்குவதற்கு கல்வி நிறுவனங்களும், அம்முறையில் பயில மாணவர்களும் முன்வருவார்கள் என்பது திண்ணம்.இது தாய்மொழி வழிக் கல்விக்கு சிறந்த ஊக்கமாக அமையும்.
தங்களின் உத்தரவை அரசு எந்த அளவுக்கு முனைப்புடன் செயல்படுத்துகிறது என்பதையும் தாங்கள் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி,
இவண்,
-ஒம்-
கே.வீ. தங்கபாலு
(மேனாள் மத்திய அமைச்சர்)
பெறுநர்:
மாண்புமிகு நீதியரசர் திரு. ராஜா அவர்கள்,
சென்னை உயர்நீதிமன்றம்,
சென்னை