அப்போலோ மருத்துவமனை, நம் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு குடல் நோய் அழற்சி அதிகரிப்பது குறித்து எச்சரிக்கிறது!

அப்போலோ மருத்துவமனை, நம் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு குடல் நோய் அழற்சி அதிகரிப்பது குறித்து எச்சரிக்கிறது!

வேகமாக மாறிவரும் வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவை குடல் அழற்சி நோயின் [Inflammatory Bowel Disease] அதிகரிப்புக்குக் காரணமாக அமைகின்றன

சென்னை, ஜனவரி 20, 2023: ஆசியாவின் முதன்மையான நம்பகமான ஒருங்கிணைந்த சுகாதார சேவைகள் குழுமமான அப்போலோ மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு இரைப்பைக் குடலியல் (காஸ்ட்ரோஎன்டராலஜிஸ்ட்) அறக்கட்டளை [Tamil Nadu Gastroenterologist Trust] ஆகியவை இணைந்து, அதிகரித்து வரும் இரைப்பை மற்றும் குடல் அழற்சி நோய் குறித்து மருத்துவர்கள், நோயாளிகள் மற்றும் சுகாதார நிபுணர்களுக்கு விழிப்புணர்வை அதிகரிக்க ஒரு மாநாட்டை நடத்துகின்றன. ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2023 அன்று நடைபெறும் ஒரு நாள் மாநாட்டில், அழ்ந்த நிபுணத்துவம் பெற்ற 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்து பங்கேற்கின்றனர்.

நோயின் தன்மை மற்றும் பாதிப்பு குறித்த மதிப்பீடு, சிகிச்சை, சிக்கலான சூழல்களைச் சமாளித்தல், கடுமையான சீழ் புண்ணை உண்டாக்கும் (அல்சரேட்டிவ்) பெருங்குடல் அழற்சி மேலாண்மை, குடல் அழற்சி சிகிச்சை மற்றும் மேலாண்மையில் அண்மைக்கால முன்னேற்றங்கள் ஆகியவை குறித்து இந்த மாநாட்டின் போது நிபுணர்களால் எடுத்துரைக்கப்படும். இந்த உயர்நிலைக் கற்றல் அனுபவம், எதிர்காலத்தில் மேம்பட்ட சிகிச்சை அளித்து, நோயாளிகளுக்கு சிறந்த அனுபவங்களை ஏற்படுத்த வழிவகுத்து, சிறந்த பலன் கொடுக்கும் என்று அப்போலோ மருத்துவமனை நம்புகிறது.

குடல் அழற்சி நோய் (IBD – Inflammatory Bowel Disease) என்பது குடல் அழற்சி மற்றும் குடல் புண்களால் வரும் ஒரு நிலை ஆகும். இது இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என இருவரையும் பாதிக்கிறது. ஐபிடி எனப்படும் குடல் அழற்சி நோய் ஒரு நீண்ட கால நோய் ஆகும். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழக்கமான சோதனைகள், சிகிச்சைகள், மருந்துகள் மற்றும் சிகிச்சை பலன்களைக் கண்காணித்தல் உள்ளிட்ட நீண்ட கால மருத்துவப் பராமரிப்பு தேவைப்படுகிறது.

அப்போலோ மருத்துவமனையால் நடத்தப்பட்ட அண்மைக்கால ஆய்வில், குடல் அழற்சி நோய் (IBD) உடையவர்களில் பெரும்பாலானவர்கள் படித்த இளம் பட்டதாரிகள் என்று தெரியவந்துள்ளது. குடல் அழற்சி நோயறிதல் மற்றும் சிகிச்சையில் உள்ள சில சிக்கலான அம்சங்கள் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான நிபுணர்களை, இந்த தளத்தின் மூலம் ஒரே மேடையில் ஒன்றிணைப்பதை அப்போலோ மருத்துவமனை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அப்போலோ மருத்துவமனையின் மூத்த இரைப்பை குடல் நோய் மருத்துவர் டாக்டர் கே.ஆர்.பழனிசாமி (Dr. K.R Palaniswamy, Senior Consultant Gastroenterologist Apollo Hospitals) செய்தியாளர்களிடம் கூறுகையில், “வேகமாக மாறிவரும் வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பிற காரணிகளால் இரைப்பை குடல் அழற்சி அதிகம் ஏற்படுகிறது. நமது மக்கள்தொகையில் குடல் அழற்சி நோய் உள்ளவர்களைக் கண்டறிவதற்கான சிறந்த தகவல்கள் மற்றும் திறன்களைப் பெற இந்த மாநாடு, நமது மருத்துவர்களுக்கு உதவும். அத்துடன் செலவு குறைந்த முறையில் நோய் மேலாண்மை மற்றும் சிகிச்சை அளிக்கவும் உதவும்.” என்றார்.