ஹாலிவுட்டுக்கு செல்லும் நடிகர் ஷாம்
ஷாம் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காவியன்’. இதில் நாயகியாக ஸ்ரீதேவி குமார், ‘மனம் கொத்திப் பறவை’ புகழ் ஆத்மியா நடித்துள்ளார்கள். மேலும் ஸ்ரீநாத், ஹாலிவுட் நடிகர் ஜஸ்டின், அலெக்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
K.V.சபரீஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பார்த்தசாரதி இயக்கியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் ‘அமெரிக்காவின் சூதாட்ட நகரம்’ என்றழைக்கப்படும் லாஸ் வேகாஸில் படமாக்கப்படவுள்ளது. லாஸ் வேகாஸில் படமாக்கப்படும் முதல் தமிழ் திரைப்படம் இதுவேயாகும்.
இப்படம் குறித்து தயாரிப்பாளர் K.V.சபரீஷ் கூறும்போது..
இப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸில் படமாக்கப்பட்டுள்ளது. சினிமாவில் மீது உள்ள ஆர்வத்தில் ‘காவியன்’ படத்தின் கதை கேட்டேன். கதை பிடித்துப்போக, உடனே தயாரிக்க விரும்பினேன். நான், கேமராமேன், இயக்குனர் என மூன்று பேரும் பல நாடுகளுக்கு சென்று லொகேஷன்கள் பார்த்தோம். லண்டனில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தோம். பின்னர் இயக்குனர் விருப்பப்படி அமெரிக்காவில் படப்பிடிப்பில் நடத்த முடிவு செய்தோம். அமெரிக்காவில் ஒரு படம் முழுவதும் உருவாகி இருக்கிறது என்றால் அது ‘காவியன்’ படமாகத்தான் இருக்கும். அங்கு படப்பிடிப்பு நடத்த மிகவும் கஷ்டப்பட்டு அனுமதி பெற்றோம்.
இயக்குனர் சாரதி குறும்படம் இயக்கியுள்ளார். இவருடைய குறும்படங்களை பார்த்துதான் படத்தை தயாரிக்க சம்மதித்தேன். இப்படத்திற்கு மிகவும் சவாலான இசையமைப்பாளர் தேவைப்பட்டார். அதனால், ஷ்யாம் மோகனை தேர்வு செய்தோம். படத்தில் பாடல்கள் ஏதும் இல்லை. ஆனால், ஹீரோ, வில்லனுக்கு பின்னணி பாடல் இருக்கிறது.
ஒரு படத்திற்கு தேவையான அனைத்து கலைஞர்களையும் நான் அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றேன். அமெரிக்காவில் பல அமைப்புகள் உண்டு. அந்த அமைப்பிடம் அனுமதிப் பெற்றால்தான், நாம் தொழில்நுட்ப கலைஞர்களை அங்கு உபயோகப்படுத்த முடியும். முறைப்படி அனைத்து அமைப்புகளிடமும் அனுமதிப் பெற்று படப்பிடிப்பு நடத்தினோம்.
இந்தப் படத்திற்கு அதிக உழைக்க கூடிய ஒரு நடிகர் தேவைப்பட்டார். ‘6 மெழுகுவர்த்திகள்’ படத்திற்காக ஷாமின் உழைப்பு மிகவும் பிடித்தது. இப்படிப்பட்டவர்தான் இந்த கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்று ஷாமை நடிக்க வைத்தேன். இதில் ஷாம் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள். மற்ற படங்கள் போன்று கதாநாயகிகள் வந்து செல்லாமல், முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமாக இருக்கும்.
ஹாலிவுட் நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அவர்களின் உழைப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. படம் பார்க்கும் போது ஹாலிவுட் படம் பார்ப்பது போல் ரசிகர்கள் உணர்வார்கள். ஆரம்பம் முதல் இறுதிவரை படம் திரில்லராக இருக்கும். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக ஒளிப்பதிவு செய்துள்ளார் ராஜேஷ். அதுபோல் ஸ்டன்ட் சிவாவின் சண்டைக்காட்சியும் அதிகம் பேசப்படும். கிறிஸ்துமஸ் தினத்தில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறோம்’ என்றார் தயாரிப்பாளர்