சென்சாரில் போராடி சான்றிதழ் பெற்றிருக்கும் ‘மறைந்திருக்கும் பார்க்கும் மர்மமென்ன’ திரைப்படம்..!

சென்சாரில் போராடி சான்றிதழ் பெற்றிருக்கும் ‘மறைந்திருக்கும்  பார்க்கும் மர்மமென்ன’ திரைப்படம்..!

எட்செட்ரா எண்டெர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர்கள் வி.மதியழகன்-ஆர்.ரம்யா தயாரித்துள்ள படம்  ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’.

இயக்குநர் மோகன் ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ‘திலகர்’ துருவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக பிக் பாஸ்’ புகழ் ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனா பிரேமும் நடித்துள்ளனர். 

இவர்களுடன் ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், மனோபாலா,  மைம் கோபி, அருள்தாஸ், ராம்ஸ், ஜே.டி.சக்கரவர்த்தி என நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர்.

பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு அச்சு இசையமைத்துள்ளார். ஷான் லோகேஷ் படத் தொகுப்பை கவனித்துள்ளார்.

இந்தப்படம் வரும் ஜூலை-27ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் படக் குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து இந்தப் படம் பற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

கதாநாயகிகளில் ஒருவரான ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் வீட்டிலும், அஞ்சனா ஜப்பானிலும் இருப்பதால் அவர்களால் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள இயலவில்லை.

பெரும்பாலும் எந்த விழாக்களிலும் அவ்வளவாக தலைகாட்டாத நகைச்சுவை நடிகர் மனோபாலா மழையையும் பொருட்படுத்தாது இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். 

#MPMEPressMeet (43)

தயாரிப்பாளர் மதியழகன் பேசும்போது, “இது எங்களது தயாரிப்பில் உருவாகியுள்ள 8-வது படம். இந்தப் படம் எங்களுக்கான முத்திரையாக அமையும். இது போன்ற சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் படங்களுக்கு மக்களும் மீடியாவும் ஆதரவு தர வேண்டும். அப்போதுதான் இது போன்ற படங்களைத் தொடர்ந்து தர முடியும்.

சமூக விழிப்புணர்வுடன் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு சென்சார் சர்டிஃபிகேட் வாங்குவதற்குள் மறைந்திருந்து பார்க்க வைத்துவிட்டார்கள். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’க்கு ‘ஏ’ சான்றிதழ் தருகிறார்கள்.. ஆனால் இந்தப் படத்திற்கு சான்றிதழே தர மறுத்துவிட்டார்கள். ஒரு நீண்ட போராட்டத்துக்குப் பின்தான் சான்றிதழே பெற முடிந்தது..” என்றார் வருத்தத்துடன்..! 

நடிகர் பாரதி மோகன் பேசும்போது, “இந்த படத்தின் தலைப்பையே இயக்குநர் பொதுமக்களைப்  பார்த்து கேட்பது போலத்தான் வைத்துள்ளார் என நினைக்கிறேன். காரணம் ரோட்டில் வழிப்பறி போல எந்த சம்பவம் நடந்தாலும் நமக்கு ஏதாவது ஆகிவிடுமோ எனப் பயந்து, மறைந்திருந்துதான் பார்க்கிறோம். அதைத் தடுக்க முயற்சிப்பதில்லை. விழிப்புணர்வு நோக்கத்துடன் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை சென்சார் அதிகாரிகள் எதற்காக தடுக்க நினைத்தார்கள் எனத் தெரியவில்லை..” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

#MPMEPressMeet (46)

கவிஞர் குணா பேசும்போது, “இந்தப் படத்தின் நாயகன் துருவாவுக்கு என்ன குறைச்சல்.? ஆண்களுக்கே பிடிக்கும் ஆணழகனாக இருக்கிறார் துருவா. படத்தின் இசையமைப்பாளர் அச்சு, சுமா நச்சென இசையமைத்துள்ளார்.

அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையை தனி ஒரு ஆளாக செய்கிறவன்தான் போராளி. அப்படி ஒரு போராளிதான் இந்தப் படத்தின் இயக்குநரான  ராகேஷ். வெள்ளைக்காரன் காலத்துல நாம சினிமா மூலமா  புரட்சிகரமான கருத்துக்களை மக்கள்கிட்ட கொண்டு போயிடக்  கூடாதுன்னு நினைச்சுத்தான் சென்சார் அமைப்பையே ஆங்கிலேயர்கள் கொண்டு வந்தாங்க.

இன்னைக்கு சென்சார்ல இருக்கிறவங்க பாலுமகேந்திராவோ, பாலசந்தரோ அல்ல. சினிமா சூட்சுமம் தெரிந்த ஆட்கள் சென்சாரில் இருந்தால்தான், தயாரிப்பாளர்கள் வாழ்க்கையில் விளையாடாமல் இருப்பார்கள்..” என தன் பங்கிற்கு சென்சாரின் தவறான அணுகுமுறையை சுட்டிக் காட்டினார்.

இந்தப் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள மாஸ் ரவி பேசும்போது, “டைரக்டர் ராகேஷ் என்னைக் கூப்பிட்டு இந்தப் படத்துல ஒரு நல்ல கேரக்டர் இருக்குன்னு சொல்லி சப்பை’ங்கிற கேரக்டர்ல நடிக்க வெச்சிருக்கார். செயின் அறுக்கிற ஆளாத்தான் நடிச்சிருக்கேன்.. இதுக்காக ட்ரெய்னிங்கூட கொடுத்தாங்க…” என்றார்.

manobala

நடிகர் மனோபாலா பேசும்போது, “ராகேஷோட இந்த இரண்டாவது படத்துலயும் நான் நடிச்சிருக்கேன்.. பொதுவா நான் எந்தப் படத்தோட விழாக்களிலேயும் அவ்வளவா கலந்துக்கிறது இல்ல.. ஆனால் இந்தப் படம் எனக்கு கொஞ்சம் ஸ்பெஷல். அதான் வந்துட்டேன்…” என்றார்.

mime gopi

நடிகர் மைம் கோபி பேசும்போது, “இந்த படத்துல செயின் அறுக்கிற கூட்டத்துக்கு தலைவனா நடிச்சிருக்கேன்.. இந்தப் படம் வெளியான பின்னாடி அநேகமாக செயின் அறுக்க என்னத்தான் கூப்பிடுவாங்கன்னு நினைக்கிறேன். நான்தான் ஸ்கெட்ச் போட்டு தரணும்…” என்றார் கலாட்டாவாக. 

படத்தின் நாயகன் துருவா பேசும்போது, “சென்சாரில் சான்றிதழ் கொடுக்க மறுத்து, அது பத்திரிகை மூலமா செய்தியா வெளியானப்பதான் இப்படி ஒரு படம் இருக்குன்னே வெளியே தெரிஞ்சது. டைரக்டர் ராகேஷ் மத்த எல்லா யூனியன்லேயும் கார்டு வாங்குற அளவுக்கு எல்லா வேலையையும் இறங்கி செஞ்சாரு. 

actor dhuruva

ஹீரோயின் இல்லாம நடக்குற சினிமா பங்ஷன் இதுவாகத்தான் இருக்கும்.. என்ன பண்றது..? ஒரு கதாநாயகி அஞ்சனா பிரேம் ஜப்பான்ல இருக்காங்க.. அவங்ககூட, கூப்பிட்டிருந்தா வந்திருப்பாங்களோ என்னவோ .. உங்களுக்கே தெரியும். இன்னொரு நாயகி ஐஸ்வர்யா தத்தா இப்ப பிக்பாஸ் வீட்டுல இருக்காங்க. எப்ப வருவாங்களோ யாருக்கு தெரியும்.? இந்தப் படத்துல என்னோட அம்மாவா சரண்யா மேடம் வாழ்ந்திருக்காங்க.. நானும் வாழ்ந்திருக்கேனான்னு படம் பார்த்துட்டு சொல்லுங்க…” என்றார்.

முத்தாய்ப்பாக பேச வந்த இயக்குநர் ராகேஷ்,  “எத்தனையோ போராட்ட செய்திகள் புதுசு புதுசா தினசரி பேப்பர்ல வந்தாலும் நாள் தவறாம இடம் பிடிச்சுட்டு வர்றது செயின் பறிப்பு சம்பவங்கள்தான். அதுதான் இந்தப் படத்தை எடுக்க என்னை தூண்டுச்சு.

director rakesh 

நள்ளிரவு 12 மணிக்கு ஒரு பெண் நகை அணிந்துகொண்டு தனியா நடந்து போனால் அதுதான் உண்மையான சுதந்திரம்னு மகாத்மா சொன்னார்.. ஆனா இன்னைக்கு பகல் 12 மணிக்கே பெண்கள் ரோட்டுல தைரியமா நடமாட முடியலையே.. இதை சொல்லித்தான் படத்தையே ஆரம்பிக்கிறோம்..

என்னுடைய முதல் படம் வெளியாகி எட்டு வருடத்துக்குப் பின் இந்தப்படம் கிடைத்துள்ளது. இதற்காக தயாரிப்பாளர் மதியழகனுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் பத்தாது.

இந்தப் படத்தின் கதாநாயகனாக துருவா அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். குன்றத்தூர் அருகே படப்பிடிப்பு நடைபெற்றபோது ஓடி வந்த வேகத்தில் தடுக்கி விழுந்து, பின்னர் மீண்டும் எழுந்து ஓடிப் போய் கொஞ்சம் தள்ளி கீழே விழுந்து கிடக்கும் சரண்யா மேடத்தை தூக்க வேண்டிய காட்சியில் அவ்வளவு இயல்பாக நடித்துள்ளார். 

அவர் கீழே விழுந்ததும் நான் கட் சொல்ல முயற்சிக்க, ஒளிப்பதிவாளர் முத்தையா குறுக்கிட்டு என்னை தடுத்துவிட்டார். அதனாலேயே அந்தக் காட்சி ரொம்ப இயல்பாக வந்துவிட்டது. எடிட்டர் ஷான் லோகேஷ்கூட  எப்படி இந்தக் காட்சியை தத்ரூபமாக படமாக்கினீர்கள் என வியந்தார்.. ‘நான் ஒண்ணு சொன்னேன்.. அதை அவங்க சரியா செய்யாததால், அந்த காட்சி கரெக்ட்டா வந்துருச்சு’ன்னு அவர்கிட்டே சொன்னேன்…” என படப்பிடிப்பு அனுபவம் பகிர்ந்தவர், அப்படியே சென்சார் மேட்டருக்கு தாவினார்.

“சென்சாரில் நாம் எதற்காக ஒரு காட்சியை எடுக்கிறோம் எனப்  புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். மொபைலில் பேசிக் கொண்டே பைக் ஓட்டுனா விபத்துல சிக்குவீங்கன்னு என ஒரு செய்தியை சொல்ல வந்தா, அவர்களோ ரத்தம் சிவப்பாக இருக்கிறது, பச்சை கலருக்கு மாற்றுங்கள் என்கிறார்கள். 

பெண்கள் எந்தவிதமாகவெல்லாம் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு அவர்களது நகைகள் பறிக்கப்படுகிறது என அவர்களை எச்சரிக்கை செய்யும் விதமாக காட்சிகளை அமைத்தால், அந்த காட்சிகளை பார்த்துவிட்டு, ‘நீங்களே செயின் அறுக்கும் வழிகளை சொல்லிக் கொடுக்கிறீர்களா?’ என கேட்கிறார்கள். 

நானும் திரைப்படக் கல்லூரியில் படித்தவன்தான். அதில் சென்சார் என்கிற ஒரு பாடமே இருக்கிறது. ‘உங்களுக்கு சென்சார் ரூல் தெரியுமா?’ என என்னை கேட்ட அதிகாரியிடம் ‘அதை படிச்சுட்டு வந்தீங்கன்னா நீங்க டைரக்டர் ஆகியிருக்க வேண்டியதுதானே சார்?’னு திருப்பிக் கேட்டேன். இதை சொன்னதுக்குத்தான் ‘சான்றிதழ் தர முடியாது’ன்னு திருப்பி அனுப்பிச்சிட்டாங்க.. அதுக்குப்புறம் போராட்டம் பண்ணி, அந்த டீம் மாறிய பின்னாடி ஒருவழியா சான்றிதழ் வாங்கினோம்…” என்கிறார்.

manobala

இயக்குநர் ராகேஷ் பேசியபோது ஆரம்பத்தில் பேச முடியாமல் கண் கலங்க, எழுந்து வந்து அவரை ஆறுதல்படுத்திய மனோபாலா, ‘நான் முதல் படம் பண்ணிட்டு மூணு வருஷம் கழிச்சுத்தான் எனக்கு அடுத்த படம் கிடைச்சுது. அதுல என்னை நிரூபிச்சு வெளியே வந்தவன்தான் நான். அவுட்டோர்ல  இருநூறு ரூபா கொடுத்து என்னைய ரிஷப்சனிலேயே விட்டுட்டுப்  போன கதையெல்லாம் இருக்கு. ஏன் அதுகூட கொடுக்காம போன கதையும் நிறைய இருக்கு. நம்ம வெற்றியாலதான் மத்தவங்களுக்கு பதில் சொல்லணும்…” எனத் தேற்றினார். 

விழாவில் எட்செட்ரா எண்டெர்டெயின்மென்ட் விவேக், பாடலாசிரியர் மீனாட்சி சுந்தரம், நடிகர்கள் மகா, சிவகுரு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவினை  பி.ஆர்.ஓ ஜான் தொகுத்து வழங்கினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *