சென்னையில் புதிதாக அமைந்திருக்கும் மைக்ரோ ப்ளெக்ஸ் ஸ்டூடியோஸின் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.
இந்த விழாவில் FEFSI-யின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் எஸ்.ஆர்.பிரபு, பைவ் ஸ்டார் கதிரேசன், நடிகர் பார்த்திபன், மயில்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் FEFSI தலைவர் R.K.செல்வமணி பேசும்போது, “இந்தியாவிலேயே முதன் முதலில் தயாரிப்பாளர்கள் தங்களுக்கென மாஸ்டரிங் யூனிட்டை உருவாக்கியிருப்பது இதுதான் முதல் முறை.
அதற்கு உதவியாக இருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், மார்ட்டின் குருஷ் கம்பெனிக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மூன்று மாதங்களுக்கு முன் தமிழ் திரைப்பட துறையில் ஏற்பட்ட வேலை நிறுத்தத்தின்போது தமிழ் திரைப்பட துறையில் நமக்கென்று புதிதாக மாஸ்டர் யூனிட் ஆரம்பிக்கப்படும் என உறுதிமொழி கொடுக்கப்பட்டது. இன்று அதன் முதல் படி எடுத்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தன் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான முதல் ஆரம்பம் இது.
இன்றையில் இருந்து ஏறக்குறைய 60 நாட்களில் இத்திட்டத்தை முறைப்படி செய்து முடிக்கும் வகையில், உலக தரத்திற்கு இணையாக அனைத்து விதமான தொழில் நுட்பத்துடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் இருக்கும் ஒரு திரையரங்கிற்கும், உடுமலை சண்முகா திரையரங்கிற்கும் இந்த மாஸ்டரிங் டெக்னாலஜியை டெலிவரி செய்து சோதனை செய்ததில் இது 100 சதவிகிதம் வெற்றியடைந்ததை கண்டோம். இது ஒரு சிறந்த நிறுவனம். இப்போதுதான் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளது.
இதன் விலை தயாரிப்பாளர்களுக்கு நிச்சயமாக சாதகமாக இருக்கும். சரியான விலையில் தரமான பொருளை தர இந்த நிறுவனம் முன் வந்துள்ளது. அந்த நிறுவனத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த முயற்சியை அடுத்து, இந்தியாவில் உள்ள அனைத்து மொழி திரைப்பட தயாரிப்பாளர்களும் தங்களுக்கென சொந்தமாக மாஸ்டர் யூனிட் ஆரம்பிப்பார்கள் என்று நம்பலாம். இது யாருக்கும் எதிராக ஆரம்பிக்கபட்டதல்ல.
திரைப்பட துறை பல்வேறு விதமாக வளர்ச்சி அடைகிறது. தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் ஒரு டெக்னீஷியனாக நட்புடன் ஒரு விஷயத்தை விளக்க விரும்புகிறேன்.
தற்போது மாறும் தொழில் நுட்பத்திற்கேற்ப நாம் மாறவில்லை என்றால் நம் இடத்திற்கு வேறு யாராவது வந்துவிடுவார்கள். பிலிமிலிருந்து டிஜிட்டலுக்கு மாறுவதற்கு 5 முதல் 10 வருடம் தேவைப்பட்டது. இப்போது அடுத்த கட்டத்திற்கு செல்ல அவ்வளவு காலம் தேவைப்படாது. 5 மாதங்களே போதுமானது.
இந்த தொழில் நுட்பத்தை தயாரிப்பாளரோ, விநியோகஸ்தர்களோ புரிந்து கொள்ளவில்லையென்றால் இத்துறை நம்மை விலக்கி வைத்துவிடும். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பகைமை இல்லாமல் எந்த கருத்து வேறுபடாக இருந்தாலும் நமக்குள்ளேயே பேசி சுமுகமாக தீர்த்துக் கொள்வது நல்லது.
இது தயாரிப்பு துறை தனக்கான சந்தையை தானே உருவாக்கிய நுட்பமே தவிர யாருக்கும் எதிராக ஆரம்பிக்கப்பட்டதல்ல. இதனால் தயாரிப்பாளர்களுக்கு 100 சதவீதம் நன்மை உண்டு. சென்சார் அதிகாரிகளுக்கு திரையிடுவதற்காக என்றே, ஒரு திரையரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் மிக குறைந்த விலையில் தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கப்படுவதாக உறுதிமொழி அளித்துள்ளார்கள் நிர்வாகிகள். தயாரிப்பாளர் சங்கம் தங்கள் உறுப்பினர்களுக்கு இதையெல்லாம் விளக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் தொழிலாளர்கள் நன்றாக இருக்க முடியும். இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்..” என்றார் ஆர்.கே.செல்வமணி.
விழாவில் நடிகர் பார்த்திபன் பேசும்போது, “இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது நாற்காலிகள் எல்லாம் பின்னாடி இருந்தது. நாங்கதான் கொஞ்சம், கொஞ்சமாக முன்னாடி தள்ளிட்டு வந்தோம். ஏனென்றால் தமிழ் சினிமாவை முன்னுக்கு கொண்டு வரும் வழி இந்த நாற்காலிகளை முன்னுக்கு கொண்டு வருவதுதான்.
அது போலத்தான் இந்த மைக்ரோ பிளெக்ஸ் ஸ்டுடியோவின் முதல் படி. ஒருவன் பார்மஸியில் கேட்கிறான் ‘ஏன்பா தேள் கொட்டியது என்று மருந்து வாங்கி சென்றாயே.. இப்போது மறுபடியும் எதுக்கு வந்தாய்?’ என்று கேட்கிறான் அதற்கு அவன் ‘மருந்து கொட்டிவிட்டது’ என்றானாம். தேள் கொட்டினால்கூட பரவாயில்லை; மருந்து கொட்டியதேன்றால் ரொம்ப கஷ்டம்.
அதுபோல்தான் நமது சினிமா வியாபாரத்தில் என்ன பிரச்சனை வேண்டுமானாலும் இருக்கலாம். முதலில் நமக்குள்ளேயே ஒற்றுமை இருந்தால்தான் அதை சீர் செய்ய முடியும். குறிப்பாக செல்வமணி பெப்சியின் தலைமைக்கு வந்த உடன் நல்ல ஒற்றுமை வந்துள்ளது.
நான் கிட்டதட்ட 25 வருட காலம் சினிமாவில் உள்ளேன். அப்போது இல்லாத ஒற்றுமை இப்போது வந்துள்ளது. தமிழ் சினிமா செல்வமணி சொன்னதுபோல் தற்போதைய தொழில் நுட்பத்தையெல்லாம் புரிந்து கொண்டு சினிமாவை நல்ல முறையில் கொண்டு வருவோம். விஷால் அவர்களுக்கும் மார்ட்டின் அவர்களுக்கும் நன்றி…” என்று வாழ்த்தினார் நடிகர் பார்த்திபன்.
விழாவில் தயாரிப்பாளர் சங்க பொருளாளர் S.R.பிரபு பேசும்போது, “இந்த விழாவுக்கு வருகை தந்துள்ள அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். முதலாவதாக மைக்ரோ பிளெக்ஸ் குளோபல் நிறுவனத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மூன்று மாதங்களுக்கு முன் ஆளுக்கொரு கருத்துக்களுடன் விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். அடிப்படை பிரச்சனை என்னவென்று பார்த்தபோது தயாரிப்பாளர்களுக்கு சுய சார்பு நிலையே இல்லை என்பது தெரிந்தது. அப்போதுதான் ‘தயாரிப்பாளர்களாகிய நாமே படப் பிரதிகளை மாஸ்டரிங் செய்து திரையரங்குகளுக்கு கொண்டு சென்றால் என்ன?’ என்று தோன்றியது.
பல நிறுவனங்கள் இந்த யோசனைக்கு ஆதரவு தெரிவித்து இதை கொண்டு வர வேண்டும் என முன் வந்தார்கள். தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மாறலாம். ஆனால் அதன் முயற்சிகள் மாறாது. நல்ல டெக்னாலஜியை அதை நன்றாக தெரிந்தவர்கள் எடுத்து சென்றால் அது நீண்ட நாள் நிலைக்கும்.
இதற்கு கார்த்தி போன்ற நண்பர்கள் துணை நின்றார்கள். இந்த நேரத்தில் கார்த்தி அவர்களுக்கும் ஆல்பட்ர் அவர்களுக்கும் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு பெரிய வேலை நிறுத்தத்திற்கு பின் மீண்டும் தொடங்கியுள்ளோம். இந்த செட்டப்பை உருவாக்க இவ்வளவு காலம் எடுத்துள்ளது. ஆனால் 6 மாதங்கள் உழைத்து நமக்கு இந்த செட்டப்பை இவர்கள் கொடுத்துள்ளார்கள். இதில் அவர்களின் அர்ப்பணிப்பு தெரிகிறது. இதன் தொடக்கமும் முதல் பிரதியும் வர இன்னும் இரண்டு மாதங்களாகும். நாம் நினைத்ததை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்த நிறுவனம் தயாராக உள்ளது. இதற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக மைக்ரோ பிளெக்ஸ் குளோபல் நிறுவனத்திற்கு நன்றியை தொரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.
விழாவில் தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன் பேசும்போது, “மைக்ரோ பிளெக்ஸ் நிறுவனத்தை துவக்கி வைக்க வந்துள்ள மார்ட்டின் அவர்களுக்கும், பெப்சி தலைவர் செல்வமணி அவர்களுக்கும், பத்திரிக்கை துறை சார்ந்த அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நீண்ட நாள் கோரிக்கையாக ஒரு மாஸ்டர் யூனிட் ஆரம்பிக்க ஏகப்பட்ட போராட்டங்கள் இருந்தது. அந்த போராட்டத்தில் 48 நாள் வேலை நிறுத்தம் நடந்தது. அப்போது தயாரிப்பாளர் சங்கம் சார்பாக மாஸ்டர் யூனியன் வேண்டும் என்ற கோரிக்கையா எழுந்தது. அப்போது நிர்வாகிகள் அனைவரும் கலந்து பேசி டெக்னாலஜியை அப்டேட் பண்ணக் கூடிய ஒரு நிறுவனம் வேண்டும் என்றபோது எல்லா விதத்திலும் தயாராக இருந்தார்கள் ஆல்பர்ட்டும், கார்த்தியும். கார்த்தி அவர்கள் கிட்டதட்ட பத்து ஆண்டுகள் இந்த விஷூவல் சாப்ட்வேர் பற்றி அப்டேட்டாக தெரிந்தவர்.
இதன் அடிப்படை ஆரம்பம்தான் மைக்ரோ பிளஷ் என்ற விழா. இது தொடர்ந்து தயாரிப்பாளர்களுக்கும், திரைதுறையினருக்கும் பயன் அளிக்கும். அனைவருக்கும் மேற்கொண்டு பல நற்செய்திகளை மைக்ரோ பிளெக்ஸ் நிறுவனத்தினர் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்..” என்றார்.