இந்தோ யுஏஇ பொருளாதார வர்த்தக சபை சென்னையில் துவக்கம்

இந்தோ யுஏஇ பொருளாதார வர்த்தக சபை சென்னையில் துவக்கம்

~ துவக்க விழாவில் மெஜஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட்ஸ், ஆப்பிரிக்கா வேர்ல்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனங்களுடன் எம்எம் ஜெம்ஸ் அன்ட் ஜூவல்லரிஸ் நிறுவனம் 2 புரிந்துணர்வு ஒப்பந்தம் ~

சென்னை, ஜூலை 16–: சென்னையில் இந்தோ யுஏஇ பொருளாதார வர்த்தக சபையை ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆளும் குடும்ப உறுப்பினர் ஷேக் சுல்தான், ஆப்பிரிக்கா வேர்ல்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஹெய்ன் ஹெல்ம் மற்றும் ஆற்காடு நவாப் நவாப்சாதா முகமது ஆசிப் அலி, எம்எம் ஜெம்ஸ் அன்ட் ஜூவல்லரிஸ் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் பிரபு இன்பதாஸ் மற்றும் இயக்குனர் ஸ்ரீதேவி அருணாச்சலம் ஆகியோர் முன்னிலையில் மெஜஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் எச்.எச்.ஷேக் மஜித் ரஷித் அல் முல்லா துவக்கி வைத்தார். இந்தோ யுஏஇ பொருளாதார வர்த்தக சபையின் தலைவராக ஸ்ரீதேவி அருணாச்சலம் பதவி ஏற்கவுள்ளார்.

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே, குறிப்பாக தமிழ்நாட்டில் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த பொருளாதார வர்த்தக சபை சென்னையில் துவங்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே கடந்த 1970ம் ஆண்டு 180 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த வர்த்தகம் 2019-–20ம் ஆண்டில் 59 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்தியாவில் சேவைத் துறை (15.78%), கடல் போக்குவரத்து (8.8%), மின்சாரம் (8.34%) மற்றும் கட்டுமான (கட்டமைப்பு) நடவடிக்கைகள் (7.15%) மற்றும் கட்டுமான மேம்பாடு; டவுன்ஷிப்கள், வீடுகள் கட்டமைக்கப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான மேம்பாட்டுத் திட்டங்கள் (7.08%) ஆகிய 5 முக்கிய துறைகளில் ஐக்கிய அரபு அமீரகம் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் உலகளாவிய ரத்தினங்கள் மற்றும் நகை வணிகத்தில் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் எம்எம் ஜெம்ஸ் அன்ட் ஜுவல்லரிஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த மெஜஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் இரு நாடுகளிலும் வைரத் தொழிலை மேம்படுத்தவும் இணைந்து பணியாற்றவும் எம்எம் ஜெம்ஸ் அன்ட் ஜுவல்லரிஸ் நிறுவனம் ஆப்பிரிக்கா வேர்ல்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்துடனும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்த துவக்க விழாவில் பேசிய எச்.எச்.ஷேக் மஜித் ரஷித் அல் முல்லா கூறுகையில், இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தங்க நகைகள் மற்றும் நவரத்தினங்கள் ஏராளமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த மே மாதம் நடைமுறைக்கு வந்த இந்திய – ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் காரணமாக இந்த துறையில் பலவிதமான நன்மைகள் கிடைக்கும். ஐக்கிய அரபு அமீரகம் 80 சதவீதம் கல் பதிக்கப்பட்ட நகை, நவரத்தினங்கள் மற்றும் தங்க நகை ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது, தங்க நகைகள் மற்றும் கற்கள் பதித்த தங்க நகைகளின் ஏற்றுமதியானது இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2023-ம் ஆண்டில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என இந்திய ரத்தினங்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து, எம்எம் ஜெம்ஸ் அன்ட் ஜுவல்லரிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரபு இன்பதாஸ் கூறுகையில், எங்கள் நிறுவனம் இன்று கையெழுத்திட்ட இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு அம்சங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். ஏனெனில் இந்த ஒப்பந்தங்கள் உலகளவில் ரத்தினக் கற்கள் மற்றும் நகைத் தொழில்களின் எதிர்கால வளர்ச்சிக்கு எங்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். தற்போதைய காலக்கட்டத்தில் ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் தேவை என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. மேலும் இந்த துறை வரும் ஆண்டுகளில் மிகப்பெரிய எழுச்சியை காணும் என்று அவர் தெரிவித்தார்.

இந்தோ யுஏஇ பொருளாதார சபை துவக்க விழாவில் பேசிய எம்எம் ஜெம்ஸ் அன்ட் ஜுவல்லரிஸ் இயக்குனர் ஸ்ரீதேவி அருணாச்சலம் பேசுகையில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே வணிகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவருவதே இந்த சபையின் முக்கிய குறிக்கோளாகும். ஐக்கிய அரபு அமீரகத்தைப் பொறுத்தவரை அது வேகமாக வளரும் நாடாகும். மேலும் தொழில்நுட்பம் மற்றும் கட்டுமானத்தைப் பொறுத்தவரை அவர்களுக்கு நீண்ட நெடிய தொலைநோக்குப் பார்வை உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவை வலுப்படுத்துவதில் இந்த சபை மிகச்சிறப்பாக பங்காற்றும். மேலும் இது நமது இரு நாடுகளுடன் வர்த்தகம் செய்ய விரும்பும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவில் உள்ள வர்த்தகர்களுக்கு உதவுவதோடு, தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய விரும்புவோருக்கும் வழிகாட்டும் என்றும் அவர் பேசினார்.