மலையாள இயக்குனர்கள் பலருக்கும் தமிழில் படம் இயக்க வேண்டும் என்கிற ஆர்வம் நிறையவே உண்டு.. இதற்கு முன் பலர் அப்படி வந்து தங்களது திறமையை நிரூபித்துள்ளார்கள்.. அந்தவகையில் மலையாள திரையுலகில் இருந்து புதிய வரவாக தமிழுக்கு வந்திருப்பவர் தான் இயக்குனர் குமார் நந்தா.
மலையாளத்தில் ‘கொட்டாரத்தில் குட்டி பூதம்’, ‘முள்ளசேரி மாதவன் குட்டி நேமம் P.O’ ஆகிய படங்களை இயக்கியுள்ள இவர் மலையாள டிவி சீரியல்களில் பிரபல நடிகையான ‘பிரஜூஷா (Prajusha)’ கதையின் நாயகியாக நடிக்கும் ‘அகதி’ எனும் தமிழ் படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இந்தப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது..
இதை தொடர்ந்து அடுத்ததாக ‘சூறாவளி’ என்கிற படத்தை இயக்கவுள்ளார் குமார் நந்தா. கோல்டன் விங்ஸ் நிறுவனம் சார்பாக ஷ்யாம் மோகன் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு V.S. சஜி ஒளிப்பதிவு செய்ய, ராம் இசையமைக்கிறார்.
தொட்டால் தொடரும், சேது பூமி படங்களின் நாயகன் தமன் குமார் & கேரளா நாட்டிளம் பெண்களுடனே, பட்டதாரி படங்களின் நாயகன் அபி சரவணன் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, மனிஷாஜித் கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் அருண் பத்மநாபன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
ஒருபக்கம் கஞ்சா விற்கும் கும்பல்.. இன்னொரு பக்கமோ அவர்களை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டிய போலீஸாரும் போட்டிக்கு கஞ்சா விற்கின்றனர்.. இவர்களுக்குள் ஏற்படும் தொழில் போட்டியும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் இந்தப்படம் விவரிக்கிறது.. கேரளாவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் வரும் ‘ஜூலை 10’ முதல் சுமார் 15 நாட்கள் இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடத்தவுள்ளார்கள்.
நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்
நடிகர்கள்: தமன் குமார், அபி சரவணன், மனிஷாஜித், அருண் பத்மநாபன் மற்றும் பலர்
தயாரிப்பு: ஷ்யாம் மோகன் – கோல்டன் விங்ஸ் நிறுவனம்
ஒளிப்பதிவு: V.S.சஜி
இசை: ராம்
ஸ்டண்ட்: நாக் அவுட் நந்தா
நடனம்: கூல் ஜெயந்த் & சுரேஷ்
இயக்கம்: குமார் நந்தா